ஆமையைக் காப்பாற்ற முயன்று ஓட்டுநர் காயம்: லாரி கவிழ்ந்து 12 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் வழிந்தோடியதால் பரபரப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

கேரளாவில் சாலையில் போய்க் கொண்டிருந்த ஆமையின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் லாரியை சற்று திருப்பினார். ரோடு ரோலரின் மீது டேங்கர் லாரி மோதியதில் 12 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் தரையில் கொட்டியது.

இன்று அதிகாலை நடந்த இச்சம்பவத்தில் லாரி டிரைவர் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து காவல்துறை கூறியுள்ளதாவது:

''கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த வடகரா கடற்கரை நகரத்திற்கு அருகே உள்ள நெடுஞ்சாலை வழியே சென்று கொண்டிருந்த பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) டேங்கர் லாரி கவிழ்ந்ததில் 12 ஆயிரம் பெட்ரோல் தரையில் கொட்டியது.

அதிகாலை 5.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தின்போது சாலையில் ஒரு ஆமை சென்றுகொண்டிருந்ததை ஓட்டுநர் பார்த்துள்ளார். அதன் மீது மோதாமல் இருப்பதற்காக லாரியை சற்றே திருப்பியுள்ளார். அந்நேரம் எதிரே வந்த ரோடு ரோலர் மீது டேங்கர் லாரி மோதியது.

இதனால் டேங்கர் லாரி கவிழ்ந்தது. லாரியில் இணைக்கப்பட்டிருந்த மூன்று பெட்டிகளிலும் தலா 4 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் இருந்தது. மூன்று பெட்டிகளும் கவிழ்ந்ததால் 12 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் மொத்தமும் தரையில் சிதறியது.

விபத்தில் டிரைவர் மட்டுமே காயமடைந்தார். அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாங்கள் சாலையை மூடிவிட்டோம், போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது''

இவ்வாறு காவல்துறை தெரிவித்துள்ளது.

மீட்புப் பணியில் ஈடுபட்ட மீட்புக் குழுவைச் சேர்ந்த ஒரு தீயணைப்பு வீரர் பிடிஐயிடம் கூறுகையில், "தீயணைப்பு இயந்திரங்கள் அந்த இடத்தை அடைந்தன. நாங்கள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in