400 ஆண்டுகள் பழமை வாய்ந்த குரானை ரூ.5 கோடிக்கு விற்க முயன்ற 10 பேர் கைது

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த குரானை ரூ.5 கோடிக்கு விற்க முயன்ற 10 பேர் கைது
Updated on
1 min read

சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த குரானை ரூ. 5 கோடிக்கு விற்க முயன்ற 10 பேர் கொண்ட கும்பலை மைசூரு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ற‌னர்.

இது தொடர்பாக மைசூரு மாநகர காவல் கண்காணிப்பாளர் அபினவ்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, கர்நாடகாவை சேர்ந்த ஒரு கும்பல் இஸ்லாமியர்கள் புனித நூலான குரானின் மிக பழமையான பதிப்பை, பல கோடிக்கு ரூபாய்க்கு விற்க முயற்சிக்கிறது. அந்த பழமையான குரான் குறித்து இணையதளத்தில் தகவல் வெளி யிட்டு, வெளிநாட்டுக்கு விற்கப்பட வாய்ப்பு இருக்கிறது என ஹைதராபாத் குற்றப்பிரிவு போலீஸார் கடந்த வாரம் தகவல் அளித்தனர்.

அதன் பேரில் மைசூரு கே.ஆர்.நகர் போலீஸார் அந்த மோசடி கும்பலை அணுகினர். அப்போது, இந்தியாவில் மிகவும் பழமையான இந்த குரான் தங்கத் தாளில் எழுதப் பட்டது. இதன் விலை ரூ. 5 கோடி எனக்கூறி, ஒரு வீடியோவையும் அனுப்பினர். அந்த வீடியோவை ஆராய்ந்த போது, மோசடி கும்பலிடம் இருக்கும் குரான் விலை மதிப்பற்றது என தெரிய வந்தது. இதையடுத்து அந்த கும்பலிடம் பேசி தனியார் விடுதிக்கு வரவழைத்தனர்.

அப்போது குரானை விற்க முயன்ற 10 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது புராதன பொருளை சட்ட விரோத மாக விற்க முயன்றது, மோசடி செய்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளோம் என்றார்.

அந்த குரானை 93 வயதான வரலாற்றியல் ஆய்வாளரும், மங்களூரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான பி. ஷேக் அலி ஆய்வு செய்தார். இது தொடர்பாக அவர், `தி இந்து' விடம் கூறியதாவது:

''என்னுடைய இத்தனை ஆண்டு கால அனுபவத்தில் இத்தகைய அரிதான குரானை பார்த்ததில்லை. 604 பக்கங்கள் கொண்ட இந்த குரான் தங்க முலாம் பூசப்பட்ட தாளில், கறுப்பு மையால் அரபி மொழியில் எழுதப்பட்டு இருக்கிறது.

ஒரு தேர்ந்த, அனுபவம் வாய்ந்த‌ எழுத்தர் 6 அல்லது 7 ஆண்டுகள் இதனை எழுதி இருக்கலாம். இந்த குரான் சாய்வு வடிவிலான எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது. இதில் 30 பாராக்களும், சம அளவுடைய 114 சுராக்களும் இடம்பெற்றிருக்கின்றன''என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in