'கோட்சே தேசபக்தர்' என்ற பிரக்யா தாக்கூரை பாதுகாப்புக் குழுவில் இருந்து நீக்க பாஜக முடிவு; ராகுல் காந்தி பளிச் பதில்

பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் : கோப்புப்படம்
பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் : கோப்புப்படம்
Updated on
2 min read

மகாத்மா காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சே தேசபக்தர் என்று பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் பேசியதற்குக் கண்டனம் தெரிவித்த பாஜக, நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவில் இருந்து அவரை நீக்கப் பரிந்துரை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.

மாலேகான் குண்டுவெடிப்புத் தாக்குதல் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் 2008-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறை சென்றார். இவர் மீதான வழக்கை போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் கைவிடுவதாக தேசிய புலனாய்வு மையம் 2015-ம் ஆண்டு தெரிவித்தது. ஆனால், விசாரணை நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் 2017-ல் இவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீனில் வெளிவந்த பிரக்யா சிங் தாக்கூர், மத்தியப் பிரதேசம் போபால் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை எதிர்த்துப் போட்டியிட்டு வென்று எம்.பி.யானார்.

இந்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாடாளுமன்ற பாதுகாப்பு ஆலோசனைக் குழு கடந்த மாதம் 21-ம் தேதி அமைக்கப்பட்டது. அதில் எம்.பி. பிரக்யா சிங்கிற்கு இடம் அளிக்கப்பட்டது.

ஏற்கெனவே மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, மகாத்மா காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சைவை தேசபக்தர் என்று பேசி பிரக்யா தாக்கூர் சர்ச்சையில் சிக்கினார். பாஜகவின் நடவடிக்கைக்கும் ஆளாகினார்.

இந்நிலையில், மக்களவையில் நேற்று எஸ்பிஜி திருத்த மசோதா தொடர்பாக விவாதம் நடந்தது. அதில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசுகையில், " கோட்சே ஏன் காந்தியைக் கொலை செய்தார் தெரியுமா ?" என்று பேசினார்.

அதற்கு உடனே எழுந்து இடைமறித்துப் பேசிய பிரக்யா தாக்கூர் " தேசபக்தர் என்ற வார்த்தைக்கு எல்லாம் நீங்கள் உதாரணம் அளிக்க முடியாது. கோட்சே ஒரு தேசபக்தர்" என்று பேசினார். இதற்கு அவையில் இருந்த காங்கி்ரஸ் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், பிரக்யா தாக்கூரின் வார்த்தைகள் சபைக்குறிப்பில் இடம் பெறாது என்று சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்

இந்த சூழலில் பாஜகவின் செயல் தலைவர் ஜே.பி. நட்டாவிடம் டெல்லியில் நிருபர்கள் பிரக்யா தாக்கூர் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில், " மகாத்மா காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சைவை தேசபக்தர் என்று மக்களவையில் பிரக்யா தாக்கூர் பேசியது கண்டனத்துக்குரியது. சமீபத்தில் அவர் நாடாளுமன்றப் பாதுகாப்புக் குழுவில் இடம் பெற்றார். அந்தக் குழுவில் இருந்து அவரை நீக்கப் பரிந்துரை செய்யப்படும். மேலும், பாஜக நாடாளுமன்றக் கூட்டத்திலும் பிரக்யா தாக்கூர் பங்கேற்கக் கூடாது என்று பாஜக முடிவு செய்துள்ளது" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே நாடாளுமன்றக் கூட்டத்துக்கு பங்கேற்க காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி காலையில் வந்தார். அப்போது அவரிடம் நிருபர்கள், பிரக்யா தாக்கூர் பேசியது குறித்து கேட்டனர். அதற்கு ராகுல் காந்தி பதில் அளிக்கையில், " தீவிரவாதி பிரக்யா தாக்கூர் தீவிரவாதி கோட்சேவை தேசபக்தர் என்று சொன்னாரா. நாடாளுமன்ற வரலாற்றில் இந்த நாள் வருத்தம் தரக்கூடியநாள். பிரக்யா தாக்கூர் என்ன கூறினாரோ அதுதான் பாஜக, ஆர்எஸ்எஸ் மனதில் இருப்பவை. இதற்கு மேல் நான் என்ன சொல்ல முடியும். இதை மறைக்க முடியாது. பிரக்யா தாக்கூருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என்று குரல் கொடுத்து என்னுடைய நேரத்தை நான் வீணடிக்க முடியாது" எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in