

சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்பிஜி) சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது.
இதன்படி பிரதமர் மற்றும் அவருடன் அதிகாரப்பூர்வ இல்லத்தில் வசிக்கும் அவரது குடும்பத்தினருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்படும். மேலும் முன்னாள் பிரதமர் மற்றும் அவருடன் அரசு வீட்டில் வசிக்கும் அவரது குடும்பத்தினருக்கு பதவி முடிவடைந்த நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு மட்டும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படும்.
முன்னதாக மசோதா மீதான விவாதத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது, “பல நாடுகளில் இது போன்ற சிறப்பு பாதுகாப்பு அந்நாடுகளின் தலைவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. எஸ்பிஜி பாதுகாப்பு என்பது உடல்சார்ந்த பாதுகாப்பு மட்டுமே அல்ல. பிரதமரின் அலுவலகம், அவரது ஆரோக்கியம் மற்றும் தகவல் தொடர்புகளையும் உள்ளடக்கியது. 1985-ல் பீர்பால் நாத் கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் பிரதமரின் பாதுகாப்புக்கு என எஸ்பிஜி உருவாக்கப்பட்டது.
1988-ல் இதற்கான சட்டம் இயற்றப்பட்டது. என்றாலும் 1991, 1994, 1999 மற்றும் 2003-ல் இந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு அதன் நோக்கம் நீர்த்துப்போகச் செய்யப்பட்டது. மூல நோக்கத்தை மீட்கவே எஸ்பிஜி சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது.
‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு
சோனியா காந்தி குடும்பத் தினருக்கு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்படவில்லை. பாதுகாப்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் நவீன சாதனங்களுடன் கூடிய ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு அளிக்கப்படுகிறது” என்றார்