

பெங்களூரு
குமாரசாமி ஆட்சியின் மீது அதிருப்தியில் இருந்த காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கட்சிகளைச் சேர்ந்த 17 எம்எல்ஏக் களிடமும் நான் தான்பேசி ராஜினாமா செய்ய வைத்தேன். அவர்களை பாஜகவுக்கு இழுத்து வந்து, தற்போது இடைத்தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியதும் நான்தான் என முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள் ளார்.
கர்நாடக சட்டப்பேரவையில் காலியாக உள்ள 15 இடங்களுக்கு டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுவதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆட்சியை தக்க வைக்கும் முனைப்புடன், முதல்வர் எடி யூரப்பா, துணை முதல்வர் அஷ்வத் நாராயணா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் முதல் வரும், பாஜக மூத்த தலைவரு மான எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று முன்தினம் இரவு சிக்கப்பள்ளாப் பூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கர்நாடகாவில் ஆட்சி செய்த குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மீது மக்களுக்கு கடும் அதிருப்தி நிலவியது. அவரது ஆட்சியில் எந்த நலத்திட்டங்களும் நிறை வேற்றப்படாததால் மஜதவினரே அதிருப்தியில் இருந்தனர்.
குமாரசாமியை ஆதரித்த காங்கிரஸ், மஜத மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களும் கூட அவர் மீது வருத்தத்தில் இருந்தனர். இதனைக் கண்டுகொள்ளாத காங்கிரஸ் மேலிடத்தின் மீதும், உள்ளூர் தலைவர்கள் மீதும் சில எம்எல்ஏக்கள் ஆத்திரத்தில் இருந் தனர். இந்த சூழ்நிலையில்தான், அதிருப்தி எம்எல்ஏக்களிடம் நான் பேசினேன். அவர்களுக்கு என் மீது நல்ல மரியாதை இருந்ததால் எனது பேச்சுக்கு செவிசாய்த்தனர்.
அதிருப்தியில் இருந்த காங்கிரஸ், மஜதவை சேர்ந்த 17 எம்எல்ஏக்களிடமும் நான் தான் பேசி ராஜினாமா செய்ய வைத்தேன். அவர்களின் கோரிக்கையை பாஜக மேலிடத்துக்கு தெரியப் படுத்தினேன். யாரும் எதிர்ப் பார்க்காத வகையில் அவர்களை பாஜகவுக்கு இழுத்துவந்து, தற்போது இடைத்தேர்தலில் வேட் பாளராக நிறுத்தியதும் நான்தான். இதையெல்லாம் பாஜகவின் நலனுக்காகவும், கர்நாடகாவின் நலனுக்காகவுமே செய்தேன்.
தற்போது தேர்தலில் பாஜக சார்பில் களமிறங்கியுள்ள 15 பேரும் வெற்றி பெற்றால் கர்நாடகாவுக்கு மிகுந்த நன்மை உண்டாகும். மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி நீடித்தால் கர்நாடகா நிச்சயம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும். எனவே, 15 பேரையும் வெற்றி பெற வைக்க வேண்டியது கர்நாடக மக்களின் கடமையாகும். இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணா பேசினார்.
குமாரசாமி அரசுக்கு எதிராக 17 எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்தது எடியூரப்பா என ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், தற்போது எஸ்.எம்.கிருஷ்ணா பகிரங்கமாக அதற்கு தாம்தான் காரணம் என கூறியிருப்பது கர்நாடக அரசி யலில் சலசலப்பை ஏற்படுத்தி யுள்ளது.