

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசில் என்சிபி, சிவசேனாவுக்கு தலா 15 அமைச்சர் பதவிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 13 அமைச்சர் பதவிகளும், சபாநாயகர் பதவியும் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் கடந்த ஒருமாதமாக எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்காமல் இழுபறி நீடித்த நிலையில் சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கட்சிகள் மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி சேர்ந்துள்ளன.
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு நாளை பொறுப்பேற்கிறது. முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்கிறார்.
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை 288 எம்எல்ஏக்களைக் கொண்டது. இதில் சிவசேனா கூட்டணிக்கு தற்போது 169 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. எம்எல்ஏக்கள் எண்ணிக்கையில் 15 சதவீதத்துக்கு மேல் அமைச்சர்கள் இடம் பெறக்கூடாது என்ற வகையில் அதிகபட்சமாக 43 அமைச்சர்கள் வரை இடம் பெறலாம்.
இதில் கூட்டணிக் கட்சிகள் பெற்றுள்ள எம்எல்ஏக்களுக்கு ஏற்றதுபோல் அமைச்சரவையில் இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. அந்தவகையில் சிவசேனா 56 எம்எல்ஏக்களும், என்சிபி கட்சி 54 எம்எல்ஏக்களும் வைத்துள்ளதால், அக்கட்சிகளுக்கு சரிசமமாக 15 அமைச்சர்கள் ஒதுக்கப்பட உள்ளன. என்சிபி கட்சிக்கு துணை முதல்வர் பதவியும் தரப்படுகிறது. சிவசேனாவுக்கு முழுமையாக முதல்வர் பதவி தரப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சி 44 எம்எல்ஏக்கள் வைத்துள்ளதால் 13 அமைச்சர் பதவிகளும், சபாநாயகர் இடமும் ஒதுக்கப்பட உள்ளது.
முதல்வராகப் பதவி ஏற்க உள்ள உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி சார்பில் 3-வது முதல்வராவார். இதற்கு முன் நாராயண் ராணே, மனோகர் ஜோஷி ஆகியோர் முதல்வர்களாக இருந்துள்ளனர்.