

இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி குறைந்திருக்கலாம். ஆனால், அதில் மந்தநிலை இல்லை என்று மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதமாகக் குறைந்தது. ஆட்டோமொபைல் துறையில் தொடர்ந்து 10 மாதங்களாக விற்பனைக் குறைவு, வேலையின்மை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளை மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுப்பினர். இது தொடர்பாக மாநிலங்களில் நீண்ட விவாதம் நடந்தது.
அதன்பின் மாநிலங்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துப் பேசியதாவது:
''காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 2009-2014 ஆட்சிக் காலத்தையும், பாஜகவின் 2014 முதல் 2019 வரையிலான ஆட்சிக்காலத்தையும் ஒப்பிட்டால் பாஜகவின் ஆட்சியில்தான் பணவீக்கம் குறைவாகவும், வளர்ச்சி அதிகமாகவும் இருந்துள்ளது.
2009-14 வரை நாட்டுக்குள் 18,950 கோடி டாலர்கள் வெளிநாட்டு முதலீடு வந்துள்ளது. ஆனால், பாஜகவின் 2014-19 ஆம் ஆண்டு அரசின்போது 28,390 கோடி டாலர் வெளிநாட்டு முதலீடு வந்துள்ளது. ஏறக்குறைய 41,260 கோடி அமெரிக்க டாலர்கள் கூடுதலாக வந்துள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்திருக்கலாம். ஆனால், மந்தநிலை இல்லை. நாட்டின் பொருளாதாரத்தில் மந்தநிலையே இல்லை.
பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வருவதற்காக ஏராளமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. கடந்த 2009-2014 வரை நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) 6.4 சதவீதமாக இருந்தது. ஆனால், பாஜகவின் ஆட்சியில் 2014-19 வரை நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக சராசரி வளர்ச்சி இருந்துள்ளது" எனத் தெரிவித்தார்.
ஆனால், நிர்மலா சீதாராமனின் பதில் அளிக்கும்போது மாநிலங்களவையில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். நிர்மலாவின் பதில் அதிருப்தி அளித்ததால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
மாநிலங்களவைக்கு வெளியே நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து எதிர்க்கட்சிகள் இதே பழக்கத்தையே வைத்திருக்கிறார்கள். ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி விவாதம் நடத்தக் கோருகிறார்கள், மத்திய அரசு ஏதேனும் விளக்கம் அளிக்க முன்வந்தால் அதைக் காது கொடுத்துக் கேட்காமல் வெளிநடப்பு செய்து விடுகிறார்கள். நான் எழுந்து நின்று பதில் அளித்தால், கூச்சலிடுகிறார்கள். நான் தொடர்ந்து பேசினால், வெளிநடப்பு செய்கிறார்கள். இது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானது அல்ல" எனத் தெரிவித்தார்.