Last Updated : 27 Nov, 2019 06:23 PM

 

Published : 27 Nov 2019 06:23 PM
Last Updated : 27 Nov 2019 06:23 PM

10-ம் வகுப்பு மாணவர் தலைப்பாகை அணிய எதிர்ப்பு: தனியார் பள்ளிக்கு சீக்கிய அமைப்புகள் கண்டனம்

10-ம் வகுப்பு மாணவர் தலைப்பாகை அணிய எதிர்ப்பு தெரிவித்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் பள்ளிக்கு சீக்கிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நஜிதாபாத்தில் அமைந்துள்ள செயின்ட் மேரிஸ் பள்ளியில் நவ்ஜோத் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு வரை சீக்கியர்கள் அணியும் தலைப்பாகையை அணிந்து பள்ளிக்கூடம் வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கவனித்து வந்த பள்ளி முதல்வர் மாணவரை அழைத்து ''பள்ளிக்கூடத்திற்கு வரும்போது தலைப்பாகை அணிந்து வரக்கூடாது'' என உத்தரவிட்டார். இதற்கு சீக்கிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மாணவருக்கு தலைப்பாகை அணிந்து வரத் தடை விதித்த பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்ரீ குரு சிங் சபாவின் தலைவர் பால்பிர் சிங் கூறியதாவது:

''பள்ளி முதல்வரின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. இப்பிரச்சினையை நாங்கள் மேலிடம் வரை கொண்டு செல்ல உள்ளோம். தலைப்பாகை என்பது சீக்கிய மக்களின் அடையாளம் ஆகும். இது எங்கள் கண்ணியத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது. எனவே, அதை அணிவதை நாங்கள் நிறுத்த முடியாது. மாணவருக்கு தலைப்பாகை அணியத் தடை விதித்த பள்ளியின் முதல்வரை நாங்கள் சந்திக்க முயன்றோம். ஆனால் அவர் எங்களைச் சந்திக்க அனுமதி தரவில்லை.

சிறுவனின் பெற்றோர் பள்ளி முதல்வரைச் சந்தித்தனர். பெற்றோரிடம் பேசிய பள்ளி முதல்வர், நவ்ஜோத் தொடர்ந்து தலைப்பாகை அணிந்தால் அனுமதிக்கப்பட மாட்டார் என்று கூறியுள்ளார்.

இப்பிரச்சினை தொடர்பாக மாவட்ட உதவி ஆட்சியரிடமும் புகார் அளித்துள்ளோம். அமிர்தசரஸில் உள்ள சிரோன்மணி குருத்வாரா பிரபந்த கமிட்டி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடமும் புகாரின் நகல்களை அனுப்பியுள்ளோம்.

பள்ளி முதல்வர் தமது உத்தரவைத் திரும்பப் பெறாவிட்டால் எங்கள் சமூக மக்கள் போராட்டத்தில் இறங்குவார்கள்''.

இவ்வாறு பால்பிர் சிங் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x