

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்து உருவாக்கியுள்ள மகா விகாஸ் அகாதியில் கூடுதலாக பகுஜன் விகாஸ் அகாதி கட்சியின் 3 எம்எல்ஏக்கள் இன்று இணைந்தனர்.
இதையடுத்து, சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாதியின் கூட்டணி பலம் 169 ஆக சட்டப்பேரவையில் அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் துணையுடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வரானார். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், என்சிபி ஆகிய கட்சிகள் சேர்ந்து அமைத்துள்ள மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே நாளை முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார். இந்த மகா விகாஸ் அகாதிக்கு 166 எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது.
இந்த சூழலில் பகுஜன் விகாஸ் அகாதி (பிவிஏ) கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் இன்று மகா விகாஸ் அகாதி கூட்டணியில் இணைந்தனர். பிவிஏ கட்சியைச் சேர்ந்த ஹிதேந்திர தாக்கூர், அவரின் மகன் ஷித்ஜி தாக்கூர், ராஜேஷ் பாட்டீல் ஆகியோர் இன்று தங்களை சிவசேனா கூட்டணியில் இணைத்துக் கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியில் இருந்த ஹிதேந்திர தாக்கூர் பிரிந்து சென்று பகுஜன் விகாஸ் அகாதி என்ற கட்சியைத் தொடங்கினார். மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு எதிராக அரசியல் செய்த பிவிஏ கட்சி தற்போது அதே கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து அரசில் பங்கேற்க உள்ளதால், அமைச்சர் பதவி வழங்கப்படலாம் எனத் தெரிகிறது
அஜித் பவாருக்கு மீண்டும் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவி?
என்சிபி கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவாருக்கு மீண்டும் கட்சியில் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவி தரப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. இன்று மாலை நடக்கும் என்சிபி கட்சியின் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
அதேசமயம் சிவசேனா அமைக்கும் அரசில் துணை முதல்வர் பதவியும் அஜித் பவாருக்கு வழங்கப்படுவதற்கான பேச்சும் இருப்பது குறிப்பிடத்தக்கது.