

பிரதமருக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்பு திருத்த மசோதாவை (எஸ்பிஜி) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.
ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின் சோனியா காந்தி குடும்பத்தாருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. 28 ஆண்டுகளாக அதன் பாதுகாப்புக்குள் சோனியா குடும்பத்தினர் இருந்து வந்தனர்.
ஆனால் கடந்த 8-ம் தேதி முதல் முறையாக அந்தப் பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய மூவருக்கும் சிஆர்பிஎப் மூலம் வழங்கப்படும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதேசமயம், இனிமேல் எஸ்பிஜி பாதுகாப்பு என்பது பிரதமருக்கு மட்டும் வழங்கப்படும். அவர்கள் குடும்பத்தினர் பிரதமருடன் அவருடைய அதிகாரபூர்வ இல்லத்தில் வசித்தால் மட்டுமே வழங்கப்படும் உள்ளிட்ட திருத்தங்களுடன் சிறப்பு பாதுகாப்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த எஸ்பிஜி திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் அறிமுகம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
''நாட்டின் பிரதமருக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கும் எஸ்பிஜி மசோதாவை இதற்கு முன் இருந்த அரசுகள் அதை தங்களுக்கு ஏற்றார்போல் மாற்றி அதன் உண்மைத் தன்மையை நீர்த்துப்போகச் செய்துவிட்டன.
எஸ்பிஜியில் வரும் ஸ்பெஷல் என்ற வார்த்தைக்குச் சிறப்பு வசதிகள் இருக்கின்றன. பல நாடுகள் தங்கள் நாட்டின் தலைவர், அதிபர், பிரதமர் ஆகியோருக்கு மட்டும்தான் இந்த சிறப்பு பாதுகாப்புப் பிரிவை அளிக்கின்றன
ஆனால், எஸ்பிஜி பாதுகாப்பு குறித்து சில தவறான புரிதல்கள் இருக்கின்றன. எஸ்பிஜி பிரிவினர் உடல்ரீதியான பாதுகாப்பு மட்டும்தான் கொடுப்பார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், எஸ்பிஜி பிரிவினர் உடல்ரீதியான பாதுகாப்பு மட்டுமின்றி, பிரதமரின் அலுவலகம், அவரின் உடல்நலன், தகவல் தொடர்பு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு விஷயங்களையும் கவனிப்பார்கள்.
கடந்த 1985-ம் ஆண்டு பிர்பால் நாத் பரிந்துரையின் அடிப்படையில் எஸ்பிஜி படை உருவாக்கப்பட்டு, அதற்கான சட்டம் 1988-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இதுவரை கடந்த 1991, 1994, 1999, 2003 ஆகிய ஆண்டுகளில் மூலச் சட்டத்தை நீர்த்துப் போகச்செய்யும் வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் இப்போது கொண்டுவரப்பட்டுள்ள திருத்த மசோதா, உண்மையான நோக்கத்தை நிறைவேற்றும்.
இந்த அரசு எஸ்பிஜி பிரிவை இன்னும் திறன்மிக்க வகையிலும், கவனக்குறைவைக் குறைக்கும் வகையிலும் செயல்படும்''.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்
இந்த சிறப்பு பாதுகாப்பு திருத்த மசோதாவின்படி பிரதமருக்கு மட்டும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படும். அவருடன் அவரின் குடும்பத்தினர் அதிகாரபூர்வ இல்லத்தில் வசித்தால் அவர்களுக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படும்.
அதேபோல முன்னாள் பிரதமர்கள், அவர்களின் குடும்பத்தினர் ஆகியோருக்கு அரசு ஒதுக்கியுள்ள வீடுகளில் வசித்தால் மட்டும் 5 ஆண்டுகளுக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படும்.
இதற்கிடையே, எஸ்பிஜி திருத்த மசோதாவை அமித் ஷா அறிமுகம் செய்து பேசிய பின்னர் காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி பேசுகையில், "எஸ்பிஜி பாதுகாப்பு முன்னாள் பிரதமருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட வேண்டும். அவர்களின் வாழ்க்கை முழுவதும் வழங்கப்பட வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.