

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 ஆகக் குறைக்கத் திட்டம் ஏதும் இருக்கிறதா என்ற கேள்விக்கு மத்திய பணியாளர் துறையின் இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் அளித்துள்ளார்.
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆகக் குறைக்கத் திட்டம் ஏதும் இருக்கிறதா என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய பணியாளர் துறையின் இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் அளித்துப் பேசியதாவது:
''அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 வயதில் இருந்து 58 ஆகக் குறைக்க எந்தவிதமான திட்டமும் தற்போது இல்லை. அடிப்படை விதிகள் 56, மத்திய குடிமைப் பணிகள் சேவை விதிகள், 16, அனைத்து இந்தியச் சேவை விதிகள் ஆகியவற்றின் கீழ் ஊழியர்கள் திறமைக் குறைவாகவோ அல்லது நேர்மைக் குறைவாகவோ இருந்தால், பொதுநலன் கருதி அவர்களை ஓய்வு வயதுக்கு முன்பே பணியில் இருந்து விலக்க அரசுக்கு முழு உரிமை இருக்கிறது. அவ்வாறு நீக்குவதற்கு முன் குறைந்தபட்சம் 3 மாத அவகாசம் எழுத்து மூலம் வழங்கப்படும் அல்லது 3 மாத ஊதியம் தரப்பட்டு நீக்கப்படுவார்கள். இந்த விதிமுறைகள் அனைத்தும் அரசு ஊழியர்களுக்குப் பொருந்தும்.
அந்த அரசு ஊழியர் குரூப் ஏ அல்லது பி பிரிவில் பணியாற்றுபவராகவும், அவர் நிரந்தரப் பணியாளராகவும், அல்லது தற்காலிக நியமனமாகவும் இருந்தால் அவரின் வயது 35 வயதுக்கு முன்பாக அல்லது 50 வயதுக்கு மேல் இருந்தால் இந்த விதிகள் பொருந்தும். இடைப்பட்ட வயதில் இருந்தால், இந்த விதிகள் அந்த ஊழியர் 55 வயதை அடைந்த பின் இந்த விதிகள் பொருந்தும்".
இவ்வாறு அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்தார்.
ரயில்வே துறை கேள்விக்கு பதில்
மக்களவையில் ரயில்வே தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், "கடந்த 2018-19 ஆம் ஆண்டில் ரயில்வே துறை ரயில்வே நடைமேடையைப் பயன்படுத்துவதற்காக பயணிகளிடம் இருந்து டிக்கெட் கட்டணம் வசூலித்த வகையில் ரூ.139.20 கோடி வசூலித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் மாதம் வரை ரூ.78.50 கோடி நடைமேடை டிக்கெட்டுகள் விற்பனை மூலம் கிடைத்துள்ளது. அதேபோல 2018-9-ம் ஆண்டில் ரயில்வே நிலையங்களில் விளம்பரம் செய்ய அனுமதித்தல், கடைகள் அமைக்க அனுமதி அளித்தல் போன்றவற்றின் மூலம் ரயில்வே துறைக்கு ரூ.230.47 கோடி வருவாய் கிடைத்துள்ளது" எனத் தெரிவித்தார்.