

'கார்ட்டோசாட் - 3' செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்க செயற்கைக்கோள்களை, 'பி.எஸ்.எல்.வி. - சி46' ராக்கெட் உதவியுடன், 'இஸ்ரோ' விண்ணில் செலுத்தியதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவாண் விண்வெளி மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி47 ராக்கெட் இன்று காலை 9:28 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. 1,625 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், பூமியில் இருந்து 509 கி.மீ., தொலைவில் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும்.
பிஎஸ்எல்வி-சி47 ராக்கெட்டில் கார்ட்டோசாட்-3 செயற்கைக்கோள் உட்பட அமெரிக்காவின் 13 நானோ செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன.
நாட்டின் பாதுகாப்பு தகவல் தொடர்பு போன்றவற்றின் ஆய்வுக்காக பி.எஸ்.எல்.வி. - ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகள் உதவியுடன் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது இஸ்ரோ.
தற்போது ராணுவ ஆய்வுகளுக்கு உதவுவதற்காக 'கார்ட்டோசாட் - 3' செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் 'பி.எஸ்.எல்.வி. - சி46’ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “கார்ட்டோசாட் - 3' என்ற செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்க செயற்கைக்கோள்களை 'பி.எஸ்.எல்.வி. - சி46' ராக்கெட் உதவியுடன் விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்திய இஸ்ரோவின் ஒட்டுமொத்தக் குழுவுக்கும் எனது இதயப்பூர்வ வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.