

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று சந்தித்துப் பேசினார்கள்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. சிபிஐ விசாரணை முடிந்த நிலையில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கடந்த அக்டோபர் 16-ம் தேதி கைது செய்தனர். இதனால் சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தபோதிலும் சிதம்பரம் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்த வழக்கில் சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் முடிந்து கடந்த புதன்கிழமை அவர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது காவலை 27-ம் தேதி (இன்று) வரை நீட்டித்துச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று சிதம்பரம் முன்னிறுத்தப்பட உள்ளார்.
இந்த சூழலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, எம்.பி.ராகுல் காந்தி ஆகியோர் இன்று திஹார் சிறைக்குச் சென்று ப.சிதம்பரத்தைச் சந்தித்துப் பேசினார்கள். இவர்களுடன் ப.சிதம்பரத்தின் மகனும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரமும் உடன் இருந்தார்.
இந்தச் சந்திப்பு முடிந்த பின் கார்த்தி சிதம்பரம் நிருபர்களிடம் கூறுகையில், "என் தந்தையை ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் திஹார் சிறையில் சந்தித்துப் பேசினார்கள். இருவரும் வந்து சந்தித்துப் பேசியது காங்கிரஸ் கட்சி அவருடன் இருக்கிறது என்ற வலிமையான செய்தியை வழங்கி இருக்கிறது.
50 நிமிடங்கள் வரை எனது தந்தையுடன் ராகுல், பிரியங்கா பேசினர். கடந்த 99 நாட்களாக எனது தந்தை சிறையில் இருந்து வருகிறார். உச்ச நீதிமன்றம் நிச்சயம் நீதி வழங்கும் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே கடந்த இரு நாட்களுக்கு முன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சசி தரூர், மணிஷ் திவாரி இருவரும் சிறையில் சிதம்பரத்தைச் சந்தித்துப் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.