Published : 27 Nov 2019 06:27 AM
Last Updated : 27 Nov 2019 06:27 AM

பதவியேற்ற 4 நாட்களிலேயே பாஜக அரசு விலகல்: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கிறது சிவசேனா கூட்டணி - ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார் உத்தவ் தாக்கரே; முதல்வராக நாளை பதவியேற்கிறார்

மகாராஷ்டிராவில் பதவியேற்ற 4 நாட்களிலேயே பாஜக அரசு விலகியது. முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி சார்பில் முதல்வராக உத்தவ் தாக்கரே நாளை பதவியேற்கிறார்.

மகாராஷ்டிராவில் தேர்தலுக் குப் பின் எந்தக் கட்சிக்கும் பெரும் பான்மை இல்லாததையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனி டையே காங்கிரஸ், என்சிபி கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சியை அமைக்கும் முயற்சியில் இறங்கியது.

யாரும் எதிர்பாராத சூழலில் என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் ஆதரவுடன், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், துணை முதல்வராக அஜித் பவா ரும் பதவியேற்றனர்.

இந்நிலையில் பாஜகவை ஆட்சி யமைக்க அழைத்த ஆளுநரின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத் தில் சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட் டது. இந்த மனு மீது இரு நாட் களாக விசாரணை நடந்தது. இதனிடையே, நேற்று முன்தினம் இரவு சிவசேனா, காங்கிரஸ், என்சிபி ஆகிய 3 கட்சிகளைச் சேர்ந்த 162 எம்எல்ஏக்கள், மும்பையிலுள்ள ஓட்டலில் ஒன்று கூடி அணிவகுப்பு நடத்தினர்.

இதைத் தொடர்ந்து உச்ச நீதி மன்றம் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தது. அதில், "நாளை (இன்று) மாலை 5 மணிக்குள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி நடத்தி முடிக்க வேண்டும். நம்பிக்கை வாக் கெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும். ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கூடாது" என்று கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்தது. இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பட்னாவிஸ் ராஜினாமா

திடீர் திருப்பமாக நேற்று பிற்பகல் அஜித் பவார் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து முதல்வர் பட்னாவிஸும் பதவி விலகுவதாக அறிவித்தார். பிற்பகல் 3.30 மணிக்கு பத்திரிகையாளர்களை தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மகாராஷ்டிர மக்கள் பாஜக சிவசேனா கூட் டணிக்குத்தான் வாக்களித்தனர். சுழற்சி முறையில் முதல்வர் பதவி என சிவசேனாவுக்கு எந்த வாக் குறுதியையும் நாங்கள் அளிக்க வில்லை. ஆனால் மக்களின் தீர்ப் புக்கு எதிராக சிவசேனா சென்றுள் ளது. எங்களுக்குப் போதிய பெரும்பான்மை இல்லாததால் முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறேன். எனக்கு குதிரை பேரத்தில் விருப்பம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை, தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

இந்நிலையில், மும்பையில் நேற்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் கூறும்போது ‘‘துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்து விட்டார். தற் போது அவர் எங்கள் பக்கம் வந்து விட்டார். 5 ஆண்டுகளுக்கும் சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரேதான் முதல்வராக பதவி வகிப்பார்’’ என்றார்.

இதனிடையே, தன்னுடைய பதவி விலகல் குறித்து அஜித் பவார் கூறும்போது, “நான் தனிப்பட்ட காரணங்களுக்காக துணை முதல் வர் பதவியிலிருந்து விலகுகிறேன். அதுகுறித்து விளக்கம் அளிக்க முடியாது. என்னால் பாஜக கூட்டணி யிலும் தொடர முடியாது. அதில் நீடிக்க முடியாது அதனால் நான் பதவியில் நீடிக்க விரும்பவில்லை. பாஜகவுக்கு அளிக்கும் ஆதரவை யும் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட முடிவு” என்றார்.

பின்னர் மும்பையில் மாலை காங் கிரஸ், சிவசேனா, என்சிபி கட்சி எம்எல்ஏக்களின் கூட்டம் நடை பெற்றது. இதில் என்சிபி தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவில் சிவசேனா கட்சியின் தலை வர் உத்தவ் தாக்கரே, 3 கட்சிகளின் பேரவைக் குழுத் தலைவராக ஏக மனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இரவு 10 மணியளவில் ஆளுநர் கோஷ்யாரியை உத்தவ் தாக்கரே சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இந்நிலையில், மும்பை சிவாஜி பூங்காவில் நாளை (28-ம் தேதி) நடைபெறும் விழாவில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்கிறார்.

2 துணை முதல்வர்கள்

அவருடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர் பாலா சாஹேப் தோரட், என்சிபி கட்சியின் மூத்த தலைவர் ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் துணை முதல்வர் களாக பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, நேற்று மாலை மகாராஷ்டிரா தற் காலிக பேரவைத் தலைவராக பாஜகவைச் சேர்ந்த காளி தாஸ் கோலம்கர் பதவி யேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், மகாராஷ் டிரா மாநில சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தை இன்று காலை 8 மணிக்கு கூட்டு வதற்கு ஆளுநர் உத்தரவிட்டு உள்ளார். அப்போது புதிய எம்எல்ஏ-க்களுக்கு தற் காலிக பேரவைத் தலைவர் காளிதாஸ் கோலம்கர், பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்று தெரிய வந்துள்ளது.

சரத் பவார் - அஜித் சந்திப்பு

துணை முதல்வர் பத வியை ராஜினாமா செய்த அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை அவரது இல்லத்தில் நேற்று இரவு திடீரென சந்தித்து பேசினார். தமது ஆதரவால் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு பதவி விலகிய நிலையில், சரத் பவாரை அஜித் பவார் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சந்திப்புக்கு பிறகு, அஜித் பவார் மீண்டும் தேசியவாத காங்கிரஸில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என தெரிகிறது.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x