

மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் மூன்றும் சேர்ந்து பெரும்பான்மைக்குத் தேவையான 145 எம்எல்ஏக்களுக்கு அதிகமாக வைத்திருந்தும் அவர்களை ஆளுநர் கோஷ்யாரி ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. ஆனால், 105 எம்எல்ஏக்கள் மட்டுமே வைத்திருந்த பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார்.
ஆளுநர் கோஷ்யாரியின் இந்தச் செயலுக்கு எதிராகவும், உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு மீது இரு நாட்களாக விசாரணை நடந்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தது. அதில், " நாளை மாலை 5 மணிக்குள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும். ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கூடாது" என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் அஜித் பவார் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து முதல்வர் பட்னாவிஸும் பதவி விலகினார்.
இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் உத்தவிட்டுள்ள நிலையில் மகாராஷ்டிர சட்டப்பேரவையை நாளை காலை கூட்ட ஆளுநர் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார். இடைக்கால சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த மூத்த எம்எல்ஏ காளிதாஸ் கொலம்பகர் பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் ஆளுநர் கோஷ்யாரி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் பிறகு புதிய எம்எல்ஏக்களுக்கு அவர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
இதனிடையே சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சி எம்எல்ஏக்களின் கூட்டுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மூன்று கட்சிகளின் சார்பில் உத்தவ் தாக்கரே முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
புதிய அரசு டிசம்பர் 1-ம் தேதி மும்பை சிவாஜி பூங்காவில் பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.