நலிந்த பிரிவினர் சமமாக நடத்தப்பட வேண்டும்: மாநில அரசுகளுக்கு பொக்ரியால் வலியுறுத்தல்

நலிந்த பிரிவினர் சமமாக நடத்தப்பட வேண்டும்: மாநில அரசுகளுக்கு பொக்ரியால் வலியுறுத்தல்
Updated on
2 min read

சமூகத்தின் நலிந்த மற்றும் பின்னடைந்த பிரிவினரின் குழந்தைகள் சமமான முறையில் நடத்தப்படுவதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வலியுறுத்தி உள்ளார். இதை அவர் விழுப்புரம் தொகுதி திமுக எம்.பி.யான டி.ரவிகுமார் எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலில் தெரிவித்தார்.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரான டி.ரவிகுமார் தனது கேள்வியில், ‘பள்ளிகளில் சாதிய பாகுபாடுகளை களைவதற்கு அரசிடம் திட்டம் உள்ளதா?

புதிய கல்விக் கொள்கையில் பாலின, சாதிய, மத அடிப்படையிலான பாகுபாடுகளைக் களைவதற்கு முன்மொழியப்பட்டுள்ள நடவடிக்கைகள் எவை?

பள்ளி வளாகங்களில் நிலவும் பாகுபாடுகள் குறித்து ஆராய்வதற்கு கல்வியாளர்கள் கொண்ட குழு ஒன்றை அமைக்கும் திட்டம் அரசிடம் உள்ளதா?’ எனக் கேட்டிருந்தார்.

இதற்கு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பொக்ரியால் அளித்த பதிலில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் நமது அரசியல் அமைப்புச் சட்டம் சமத்துவத்தையும், சமூக நீதியையும் உறுதிப்படுத்தியுள்ளது.

குடிமக்களுக்கு இடையே பாகுபாடு காட்டுவதை அது தடை செய்துள்ளது .அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 15(1) இன் கீழ் எந்த ஒரு மாநிலமும் குடிமக்களை மத, இன, சாதி, பாலின மற்றும் பிறப்பு சார்ந்த இடத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் ஆறு முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசச், கட்டாயக் கல்வியை உறுதிப்படுத்தியுள்ளது. அருகமைப் பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடிக்கும் வரை இடம் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

அந்த சட்டத்தின் பிரிவு 8 (c)மற்றும் 9(சி) குறிப்பிட்ட அரசு மற்றும் உள்ளாட்சி அதிகார அமைப்பு சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட மற்றும் நலிந்த பிரிவைச் சார்ந்த குழந்தைகள் கல்வி பெறுவதிலிருந்து தடுக்கும் எந்த ஒரு செயலையும் அனுமதிக்கக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பள்ளிக்கல்வி துறை கடந்த நவம்பர் 23, 2010 அன்று ஒரு சுற்றறிக்கையை மாநிலங்களுக்கு அனுப்பி இருக்கிறது. மாணவர் சேர்க்கை வெளிப்படையாகவும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் நடத்தப்பட வேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களை எவ்வித அடையாளத்தின் அடிப்படையிலும் பாகுபடுத்துவதைத் தடுக்க வேண்டும்; பல்வேறு விதமான சமூக, பொருளாதார பின்புலத்திலிருந்து வரும் குழந்தைகள் சமமான கல்வி வாய்ப்பைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். அதைத் தடுக்கும் எந்த ஒரு தேர்வு முறையும் அனுமதிக்கப்படக்கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அக்டோபர் 26, 2012 அன்று மத்திய அரசால் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் சமூகத்தின் நலிந்த பிரிவினர் மற்றும் பின்னடைந்த பிரிவினரின் பிள்ளைகள் சமமான முறையில் நடத்தப்படுவதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கை இப்போதுதான் உருவாக்கப்பட்டு வருகிறது அது நிச்சயமாக அரசியலமைப்புச் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவே இருக்கும். பள்ளிகளில் நிலவும் பாகுபாடுகள் குறித்து ஆராய கல்வியாளர்கள் கொண்ட கமிட்டியை அமைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. இவ்வாறு தனது பதிலில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in