

மகாராஷ்டிராவில் நாளை மாலை 5 மணிக்குள் தேவேந்திர பட்னாவிஸ் அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
மகாராஷ்டிராவில் பெரும்பான்மை இல்லாத நிலையில் என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவியேற்றார்.
சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் மூன்றும் சேர்ந்து பெரும்பான்மைக்குத் தேவையான 145 எம்எல்ஏக்களுக்கு அதிகமாக வைத்திருந்தும் அவர்களை ஆளுநர் கோஷியாரி ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. ஆனால், 105 எம்எல்ஏக்கள் மட்டுமே வைத்திருந்த பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார்.
ஆளுநர் கோஷியாரியின் இந்தச் செயலுக்கு எதிராகவும், உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு மீது இரு நாட்களாக விசாரணை நடந்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தது. அதில் " நாளை மாலை 5 மணிக்குள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பை ஆளுநர் பகத்சிங் கோஷியாரி நடத்தி முடிக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும். ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கூடாது" என்று உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் வரவேற்றுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரித்விராஜ் சவாண் கூறுகையில், "மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகளுக்கு மனநிறைவை அளிக்கிறது. பாஜகவின் உண்மையான முகம் நாளை வெளிப்பட்டு விடும். நாளை காலை 11 மணிக்கு அனைத்து எம்எல்ஏக்களும் பதவி ஏற்கிறார்கள். அதன்பின் தற்காலிக சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். தேவேந்திர பட்னாவிஸ் உடனடியாக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.
என்சிபி கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் ட்விட்டரில் கூறுகையில், " உண்மை தனியாக வென்றது. பாஜகவின் விளையாட்டு முடிவுக்கு வந்துள்ளது" எனக் குறிப்பிட்டார்.
நவாப் மாலிக் மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இந்திய ஜனநாயகத்தின் மைல்கல். 5 மணிக்கு முன்பாகவே பாஜகவின் விளையாட்டு முடிவுக்கு வந்துவிடும். சில நாட்களில் சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கூட்டணி ஆட்சி மகாராஷ்டிராவில் உதயமாகும்" எனத் தெரிவித்தார்.
மகாராஷ்டிர காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் கூறுகையில், " பணபலம், உடல் வலிமையைக் காட்டிலும் அரசியலமைப்புச் சட்டம் வலிமையானது. உச்ச நீதிமன்ற உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம். நாங்கள் 162 எம்எல்ஏக்கள் இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளது.