

சபரிமலைக்குச் செல்வதற்காக பூமாதா பிரிகேட் அமைப்பின் தலைவரும் பெண்கள் நல உரிமையாளருமான திருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்துக்கு அதிகாலை வந்து சேர்ந்தார். அவருடன் 7 பெண்கள் வந்தனர்.
திருப்தி தேசாயுடன் இருந்த பெண் ஆர்வலர் பிந்து அம்மணி மீது இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் மிளகாய்ப் பொடி ஸ்பிரே அடித்து, தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சபரிமலையில் ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி என்பதால், 10 வயது முதல் 50 வயதுள்ள பெண்கள் அங்கு செல்ல காலம் காலமாகத் தடை இருந்துவருகிறது. ஆனால் இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அனைத்து வயதுப் பெண்களும் சென்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.
சபரிமலை தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனுவில் கடந்த இருவாரங்களுக்கு முன் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மனுவை 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. அதேசமயம், கடந்த ஆண்டு உத்தரவுக்குத் தடை விதிக்கவில்லை.
ஆனாலும், சபரிமலையில் அமைதியைக் குலைக்கும் வகையில் விளம்பர நோக்கில் வரும் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப் போவதில்லை என்று கேரள அரசு முடிவு செய்தது. இதை தேவசம்போர்டு அமைச்சர் சுரேந்திரனும் வெளிப்படையாக அறிவித்தார். நீதிமன்ற உத்தரவு பெற்று வரும் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறோம். மற்ற வகையில் பெண்கள் சபரிமலைக்கு வந்தால் போலீஸார் பாதுகாப்பு அளிக்க மாட்டார்கள் என்று அறிவித்தார்.
மிளகாய்ப் பொடி ஸ்பிரே வீசியதைக் கண்டித்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிந்து அம்மணி: படம் ஏஎன்ஐ
சபரிமலை தொடர்பான தீர்ப்பு வந்த உடனே பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் கூறுகையில், "பெண்கள் சபரிமலைக்குச் செல்ல உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. ஆதலால், சபரிமலைக்கு நாங்கள் 26-ம் தேதி செல்வோம். எங்களுக்கு போலீஸார் பாதுகாப்பு கொடுத்தால் ஏற்போம். இல்லாவிட்டால் பாதுகாப்பு இன்றி நாங்கள் சபரிமலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்வோம்" என அறிவித்திருந்தார்.
ஆனால் சபரிமலை தீர்ப்புக்குப் பின் ஏராளமான பெண்கள் பம்பைக்கு வந்து சபரிமலை செல்ல முயன்றபோது போலீஸார் அவர்களைச் சோதித்து கோயிலின் விதிமுறைகளைக் கூறி அவர்களைத் திருப்பி அனுப்பினர்.
கடந்த வாரம் பெண் ஆர்வலர் ரெஹானா ஃபாத்திமாவும் கொச்சி போலீஸாரிடம் சபரிமலை செல்ல பாதுகாப்பு கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் போலீஸார் அனுமதி மறுத்துவிட்டார்கள்.
இந்த சூழலில் பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் தனது ஆதரவாளர்களுடன் இன்று அதிகாலை கொச்சி விமான நிலையம் வந்து சேர்ந்தார். திருப்தி தேசாய் வந்திருப்பதை அறிந்த இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் விமான நிலையத்திலேயே போராட்டம் நடத்தினார்கள்.
திருப்தி தேசாய் உள்ளிட்ட அவருடன் வந்திருந்தவர்களை போலீஸார் பாதுகாப்பாக கொச்சி போலீஸ் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். இவர்கள் கொச்சி போலீஸ் ஆணையர் அலுவலகத்துக்குச் சென்றபோது அங்கு காத்திருந்த இந்து அமைப்புகளைச் சேர்ந்த சிலர், திருப்தி தேசாயுடன் இருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஆர்வலர் பிந்து அம்மணி மீது மிளகாய்ப் பொடி ஸ்பிரே அடித்து அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அதன்பின் அங்கு பணியில் இருந்த போலீஸார் விரைந்து திருப்தி தேசாய், பிந்து அம்மணி உள்ளிட்டோரை மீட்டு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு போலீஸாரிடம் பிந்து அம்மணி, திருப்தி தேசாய் உள்ளிட்டவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தாங்கள் சபரிபலை சென்று சாமி தரிசனம் செய்ய இருப்பதால், தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று திருப்தி தேசாய் தரப்பினர் வாக்குவாதம் செய்தனர். ஆனால், போலீஸார் அவர்கள் அலுவலகத்திலேயே தங்க வைத்துள்ளனர்.
திருப்தி தேசாய் நிருபர்களிடம் கூறுகையில், "இந்திய அரசியலமைப்புச் சட்ட நாளான இன்று ஆணும், பெண்ணும் சமம் என்பதை நிரூபிக்க வேண்டும். ஆதலால், சபரிமலைக்கு இன்று செல்ல திட்டமிட்டுள்ளோம். போலீஸார் பாதுகாப்பு அளித்தாலும், அளிக்காவிட்டாலும் நாங்கள் சபரிமலைக்குச் செல்வோம்" எனத் தெரிவித்தார்.
புனேவைச் சேர்ந்த திருப்தி தேசாய் கடந்த ஆண்டு இதேபோல சபரிமலைக்குச் செல்வதற்காக கொச்சி விமான நிலையம் வந்திருந்தார். ஆனால், விமான நிலையத்துக்கு வெளியே இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களும், ஐயப்ப பக்தர்களும் போராட்டம் நடத்தியதால், போலீஸார் அவரை புனேவுக்குத் திருப்பி அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.