

டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்று மாசு மிக மோசமான அளவில் இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், காற்றின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.
இதனிடையே இது தொடர்பான வழக்கு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி அருண் மிஸ்ரா கூறும்போது, “பொதுமக்களின் வாழ்நாளை நீங்கள் குறைக்கிறீர்கள்.
மாசடைந்த காற்றுடன் வாழ வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்படுவது ஏன்? அதைவிட, வெடிகுண்டுகளைக் கொண்டு ஒரே நேரத்தில் பொதுமக்கள் அனைவரையும் கொன்றுவிடுங்கள்.
டெல்லியில் காற்று மாசை குறைக்க மத்திய, மாநில அரசுகள் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தரப்பும் மாநில அரசுகளின் தரப்பும் ஒருவர் மீது ஒருவர் குறை கூறுகிறீர்கள்.
எனவே, மத்திய, மாநில அரசுகள் கருத்து வேறுபாடுகளை மறந்து, காற்றை தூய்மையாக்குவதற்கான கோபுரங்களை அமைக்க 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.