

மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் பணி ஓய்வுக்கான வயது வரம்பு தற்போது 60-ஆக உள்ளது. இந்நிலையில், 33 ஆண்டுகள் பணிபுரிந்த அல்லது 60 வயதை நெருங்கும் ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக சில ஊடகங்களில் நேற்று முன்தினம் செய்திகள் வெளியாகின. இது, ஊழியர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாக்குர், "மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை" என்றார்.