

கேரளாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் பாணியில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியது தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேர் குற்றவாளிகள் என என்ஐஏ நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஐஎஸ் பாணியில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருப்பதாக கடந்த 2016-ம் ஆண்டு தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதே ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி கொச்சியில் உள்ள என்ஐஏ காவல் நிலையத்தில் 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
2-ம் தேதி கண்ணூரில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடந்த விசாரணையில், அபு ஆயிஷா (எ) ஷஜீர் மங்களசேரி தலைமையில் ‘அன்சர் உல்-கலிபா கேஎல்’ என்ற பெயரில் ஒரு குழு இயங்கி வந்தது தெரியவந்தது. இக்குழு, தென்னிந்தியாவின் முக்கியப் பகுதிகளில் தாக்குதல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளது.
மேலும் வெளிநாட்டினர் அதிலும் குறிப்பாக கொடைக்கானல் அருகே உள்ள வட்டக்கனலுக்கு வரும் யூதர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் தெரிய வந்தது. ஐஎஸ் அமைப்பின் சித்தாந்தங்களை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் மூலமும் பரப்பி வந்துள்ளது.
இந்த வழக்கில் சிறப்பு நீதிபதி பி.கிருஷ்ணகுமார் நேற்று தீர்ப்பளித்தார். அதில் மன்சீத் முகமது, ஸ்வாலி முகமது, ரஷித் அலி, ராம்ஷாத், சப்வன், மொய்னுதீன் ஆகிய 6 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். அதேநேரம் ஜாசிம் என்பவரை வழக்கிலிருந்து விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.