

இயல்புநிலைக்கு வெகு தொலைவில் காஷ்மீர் உள்ளது என்று அங்கு சென்று வந்த யஷ்வந்த் சின்ஹா தலைமையிலான குழு தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் மாநிலப் பிரிவினைக்கு பிறகு அங்குள்ள கள நிலவரத்தை ஆராய முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தலைமையிலான அக்கறையுள்ள குடிமக்கள் குழு (சிசிஜி) கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீநகர் சென்றது. 5 உறுப்பினர்களை கொண்ட இக்குழு 4 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று பிற்பகல் டெல்லி திரும்பியது.
இந்தப் பயணம் குறித்து யஷ்வந்த் சின்ஹா நேற்று கூறியதாவது:காஷ்மீரில் பல்வேறு குழுக்களை சேர்ந்தவர்கள் மற்றும் தனி நபர்களிடம் நாங்கள் பேசிய பிறகு எங்கள் பயணத்தின் முடிவில் அங்கு இயல்பான சூழல் இல்லை என்ற முடிவுக்கு வந்தோம். மத்திய அரசின் நடவடிக்கைக்கு பிறகு மக்களிடம் மனரீதியிலான பிரச்சினை ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் அச்சம் நிறைந்து காணப்படுகிறது. மத்திய அரசின் இந்த மிகப்பெரிய நடவடிக்கையை அங்குள்ள மக்கள் எதிர்பார்க்கவில்லை. இதனால் அவர்கள் உணர்ச்சியற்று உள்ளனர்.
ஓட்டல்களில் தங்கியிருந்த எங்களை சந்திக்க வந்தவர்களும் பாதுகாப்பு படையினரால் அச்சுறுத்தப்பட்டனர். அவர்கள் தங்கள் பெயரை தெரிவிக்க விரும்பவில்லை. இதனால் எத்தகைய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டுமோ என அவர்கள் அச்சப்பட்டனர்.
முன்னால் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களிடம் தொலைபேசி மூலமே பேசினேன்.
தாக்குதலில் வேகத்தை மட்டுப்படுத்தும் இடைத்தாங்கிகளை மத்திய அரசு அகற்றிவிட்டு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் தங்கள் பிரச்சினைகளை யாரிடம் சொல்வது எனத் தெரியவில்லை.
ஸ்ரீநகருக்கு வெளியே சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள மக்களை சந்திக்க எங்களை அனுமதிக்கவில்லை. அரசு கள உண்மைகளை மறைக்க முயற்சிப்பதையே இது காட்டுகிறது. மத்திய அரசு காஷ்மீர் தொடர்பான தனது மனோபாவத்தை மாற்றிக்கொள்ளாவிடில் அங்கு நிலைமை மேலும் மோசமடையும். இவ்வாறு அவர் கூறினார்.- பிடிஐ