

அஜித் பவாரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி விட்டோம், கொறடா உத்தரவு பிறப்பிக்க அவருக்கு எந்த தகுதியும் இல்லை என சரத் பவார் கூறினார்.
மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ், என்சிபி கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் இறங்கின.
யாரும் எதிர்பாராத சூழலில் என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் துணையுடன், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவியேற்றனர்.
ஆனால், சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் மூன்றும் சேர்ந்து பெரும்பான்மைக்குத் தேவையான 145 எம்எல்ஏக்களுக்கு அதிகமாக வைத்திருந்தும் அவர்களை ஆளுநர் கோஷியாரி ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. ஆனால், 105 எம்எல்ஏக்கள் மட்டுமே வைத்திருந்த பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்ததாக மற்ற கட்சிகள் புகார் கூறி வருகின்றன.
ஆளுநர் கோஷியாரின் இந்தச் செயலுக்கு எதிராகவும், உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா,என்சிபி, காங்கிரஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆளுநருக்கு எதிராக சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது. மகாராஷ்டிர சட்டப்பேரவையில் தேவேந்திர பட்னாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடப்படுமா என்பது நாளை தெரியவரும்.
இந்தநிலையில் தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதை உறுதி செய்யும் வகையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று தனியார் ஓட்டலில் ஒரே இடத்தில் இன்று அணி வகுத்தனர். மூன்று கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
பின்னர் இதுகுறித்து மூத்த தலைவர் அசோக் சவான் கூறுகையில் ‘‘இன்றையக் கூட்டத்தில் 162 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். மூன்று கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையுடன் உள்ளோம். விரைவில் புதிய அரசை அமைப்போம். இதற்கு காரணமான எங்கள் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு நன்றி’’ எனக் கூறினார்.
எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மூன்று கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் உரையாற்றினர்.
இந்த கூட்டத்தில் சரத் பவார் பேசியதாவது:
‘‘எங்கள் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக அஜித் பவார் சென்று விட்டார். அவரை பொறுப்பில் இருந்து நீக்கி விட்டோம். கொறடா உத்தரவு பிறப்பிக்க அவருக்கு எந்த தகுதியும் இல்லை. நாங்கள் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினோம். அவர்களும் இதனையே கூறினார்கள். என்ன நடந்தாலும் அதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். சட்டவிரோதமாக பதவியில் இருப்பவர்கள் நீக்கப்படுவார்கள். சட்டப்படியாகவும், ஜனநாயகவும் நாங்கள் பதவியேற்போம். ’’ எனக் கூறினார்.