

மேற்கு வங்கத்தில் அகதிகளாக இடம்பெயர்ந்த மக்களுக்கு நிலம் வழங்கப்படும் என்று மாநில முதல்வரும் திரிணாமூல்காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று அறிவித்தார்.
தனியாருக்கு சொந்தமான நிலத்தில் அகதிக் குடியேற்றப் பகுதிகளை முறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய குடிமக்கள் பதிவு (என்.ஆர்.சி) செயல்முறை நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் என்ற மத்திய அரசு அறிவிப்பின் பின்னணியில் மேற்கு வங்க அரசின் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கட்சியின் வாக்கு வங்கியாக இருப்பதால், வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை திருணாமூல் பாதுகாக்கிறது என்று குற்றம் சாட்டிய பாஜக மூத்த தலைவர்கள், மேற்கு வங்கத்தில் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு (என்.ஆர்.சி) செயல்படுத்தப்படும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இன்று கொல்கத்தாவில் அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மாநில அரசு நிலத்தில் இருந்த 94 அகதிகள் காலனிகளை மாநில அரசு முன்பு முறைப்படுத்த உள்ளோம். மேலும் இடம்பெயர்ந்த மக்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தால் நில உரிமைகளும் வழங்கப்படும்.
ஆனால் அதிகள் தங்கியுள்ள குடியிருப்புகள் அனைத்தும் மத்திய அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் அமைந்துள்ளன. இவற்றை சட்டபூர்வ நடவடிக்கைகள் மூலம் அம்மக்களுக்கு சொந்தமாக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளும் பணிகள் உள்ளன.
இந்த அகதிகள் காலனிகளை முறைப்படுத்தவும், அவர்களுக்கு நில உடைமை வழங்க வேண்டுமெனவும் பேசி வருகிறோம். நீண்ட காலமாக மத்திய அரசை இதற்கான ஒப்புதலைக் கேட்டுக்கொண்டு வருகிறோம். இருப்பினும், அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் அறிவிப்புகளை அனுப்பி வருகின்றனர்.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.