

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுக்கு பிரச்சாரம் செய்வதை தவிர்க்க ராகுல் காந்தி, பிரியங்கா வத்ரா திட்டமிட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது. இதனால், அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி பிரச்சாரம் செய்ய முன்வந்திருப்பதாகவும் கருதப்படுகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஐந்து கட்ட சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 30 ஆம் தேதி துவங்கி டிசம்பர் 20 வரை நடைபெறுகிறது. இங்கு காங்கிரஸ், சிபு சரணின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) மற்றும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளன.
இம்மாநிலத்தின் 81 தொகுதிகளில் ஜேஎம்எம் 43, காங்கிரஸ் 31 மற்றும் ஆர்ஜேடி 7 எனப் போட்டியிடுகின்றன.. இதன் முடிவுகள் டிசம்பர் 23 இல் வெளியாகிறது.
இதில் காங்கிரஸ் நட்சத்திரப் பிரச்சாரகர் பட்டியலில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல், பிரியங்கா, பஞ்சாப் முதல்வரான கேப்டன் அம்ரீந்தர் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்களான சச்சின் பைலட், சத்ருகன் சின்ஹா மற்றும் கீர்த்தி ஆஸாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஆனால், சோனியா காந்தியின் உடல்நிலை காரணமாக அவர் சமீப காலமாக எந்த தேர்தலிலும் பிரச்சாரம் செய்யாமல் உள்ளார். இந்நிலையில், ஜார்க்கண்டில் தம் கட்சிக்காகத் தீவிரப் பிரச்சாரம் செய்யாமல் ராகுல் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எதிர்பார்த்த அளவில் தன் தீவிர அரசியல் நுழைவு கட்சிக்கு பலன் அளிக்காததால், பிரியங்காவிற்கும் ஜார்கண்டில் பிரச்சாரம் செய்வதில் உடன்பாடில்லை எனக் கருதப்படுகிறது. இதனால், வேறு வழியின்றி அவர்கள் இருவரது தாயும் கட்சித் தலைவருமான சோனியா காந்தியே பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுல், பிரியங்காவால் ஜார்கண்ட் காங்கிரஸ் அதிருப்தி அடைந்தாலும், சோனியா வரவால் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் காங்கிரஸின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘ராகுல் முற்றிலுமாகப் பிரச்சாரத்தை தவிர்க்காமல் தனது வெளிநாட்டு பயணத்திற்கு முன்பு ஒரிரு கூட்டங்களில் கலந்து கொள்வார்.
எனினும், பிரியங்காவிற்கு உ.பி.க்கு வெளியே நடைபெறும் எந்த கூட்டத்திலும் கலந்துகொள்ள தற்போதைக்கு விரும்பவில்லை. எனவே, சோனியா ஒரே ஒரு கூட்டத்திற்கு மட்டும் இரண்டு அல்லது மூன்றாவது கட்டத்தின் இறுதியில் பிரச்சாரம் செய்வார்.’ எனத் தெரிவித்தனர்.
இதனிடையே, கடந்த மாதம் முடிந்த ஹரியாணா மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸால் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை. இதற்கு ராகுல், பிரியங்கா ஆகியோர் அங்கு தீவிரமாகப் பிரச்சாரம் செய்யாததும் காரணம் எனப் புகார் எழுந்தது.
கால்நடை தீவன வழக்கில் சிக்கி சிறைத் தண்டனை அடைந்து வருவதால், லாலுவும் இந்தமுறை பிரச்சாரத்தில் இல்லை என்பது நினைவுகூரத்தக்கது.