Published : 25 Nov 2019 02:47 PM
Last Updated : 25 Nov 2019 02:47 PM

குளிருக்கு இதமாக பசுக்களுக்கு ஸ்வெட்டர்: அயோத்தி நகராட்சி நிதி ஒதுக்கீடு

அயோத்தி

பசு மாடுகள், காளை மாடுகள், கன்றுகளுக்கு குளிருக்கு இதமாக ஸ்வெட்டர் தயாரித்து வருகிறது உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தி நகராட்சி.

குளிர் காலம் தொடங்கியுள்ள நிலையில் வட மாநிலங்களில் இப்போதே கடும் குளிர் நிலவத் தொடங்கிவிட்டது.

இனிவரும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் இன்னும் கடுமையான குளிர் வாட்டும் என்பதால் முன்னெச்சரிக்கையாக இப்போதே கோசாலா பசுக்களுக்கு ஸ்வெட்டர் தயாரிக்கும் பணியை முடுக்கிவிட்டுள்ளது அயோத்தி நகராட்சி நிர்வாகம்.

இது தொடர்பாக அயோத்தியா நகராட்சி ஆணையர் நீரஜ் சுக்லா கூறும்போது, "நாங்கள் பசு மாடுகளை குளிரில் இருந்து காக்கும் வகையில் பிரத்யேக ஸ்வெட்டரை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். சணலால் ஆன ஸ்வெட்டர்களைத் தைக்க ஆயத்தமாகி வருகிறோம்.

இதை 3 முதல் 4 படிநிலைகளில் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம். முதற்கட்டமாக பைசிங்பூர் கால்நடை பராமரிப்பு நிலையத்தில் உள்ள 1200 பசு மற்றும் காளை மாடுகளுக்கு ஸ்வெட்டர் தைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்போதைக்கு 100 ஸ்வெட்டர்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் முதல் 100 ஸ்வெட்டர்கள் தயாரிக்கப்பட்டு கையில் கிடைக்கும். அவை பசுங்கன்றுகளுக்கானவை. பின்னர் பசுக்களுக்கும், காளைகளுக்குமான ஸ்வெட்டர்கள் தயாரித்து வரும். ஸ்வெட்டர் ஒன்று ரூ.250 முதல் 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

பசுக்களுக்கும், காளைகளுக்கும் அவற்றின் உடல்வாகுக்கு ஏற்ப ஸ்வெட்டர்களை தயாரிக்க வடிவமைப்பு மாதிரிகளைக் கொடுத்துள்ளோம். அதேபோல் மாட்டுத் தொழுவங்களில் அவை குளிர் காய்வதற்கும் நெருப்பு மூட்டப்படும்" என்றார்.

அயோத்தி மேயர் ரிஷிகேஷ் உபாதய் கூறும்போது பசுக்களைப் பாதுகாப்பதில் முழுக் கவனம் செலுத்துகிறோம். தேசத்திலேயே நாங்கள் கொண்டுவரும் திட்டம் முன்மாதிரி திட்டமாக அமையும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x