மகாராஷ்டிராவில் யார் ஆட்சி? காரசார வாதம்: சட்டப்பேரவையில் பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்துவதில் உச்ச நீதிமன்றம் நாளை உத்தரவு

சோனியா காந்தி, தேவேந்திர பட்னாவிஸ், உத்தவ் தாக்கரே, சரத் பவார் | கோப்புப் படம்.
சோனியா காந்தி, தேவேந்திர பட்னாவிஸ், உத்தவ் தாக்கரே, சரத் பவார் | கோப்புப் படம்.
Updated on
3 min read

மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர பட்னாவிஸுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநருக்கு எதிராக சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் தேவேந்திர பட்னாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடப்படுமா என்பது நாளை தெரியவரும்.

மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ், என்சிபி கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் இறங்கின.

யாரும் எதிர்பாராத சூழலில் என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் துணையுடன், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவியேற்றனர்.

ஆனால், சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் மூன்றும் சேர்ந்து பெரும்பான்மைக்குத் தேவையான 145 எம்எல்ஏக்களுக்கு அதிகமாக வைத்திருந்தும் அவர்களை ஆளுநர் கோஷியாரி ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. ஆனால், 105 எம்எல்ஏக்கள் மட்டுமே வைத்திருந்த பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார்.

ஆளுநர் கோஷியாரின் இந்தச் செயலுக்கு எதிராகவும், உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா,என்சிபி, காங்கிரஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷன், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் முன் நேற்று விசாரிக்கப்பட்டது. அப்போது குடியரசுத் தலைவர் ஆட்சியை ஆளுநர் நீக்கியது தொடர்பான கடிதங்கள், தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் அளித்த எம்எல்ஏ ஆதரவுக் கடிதங்களை இன்று தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்த வழக்கில் மகாராஷ்டிரா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சிவசேனா சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், காங்கிரஸ் என்சிபி சார்பில் அபிஷேக் சிங்வி ஆகியோர் ஆஜராகினர்.

குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கியது தொடர்பாக ஆளுநர் அனுப்பிய கடிதம், பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக அஜித் பவார் அளித்த கடிதம், பட்னாவிஸ் ஆளுநரிடம் அளித்த கடிதம் ஆகியவை நீதிமன்றத்தில் சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டன.

மத்திய அரசு சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிடுகையில், "பாஜகவுக்கு 170 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது. என்சிபி கட்சியில் இருந்து 54 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது. 2 முதல் 3 நாட்கள் ஆளுநர் தனது பதிலைத் தெரிவிக்க அவகாசம் அளிக்க வேண்டும்.

பெரும்பான்மை இருப்பதாக எந்தக் கட்சி கடிதம் அளிக்கிறதோ அந்தக் கட்சியை அழைப்பதுதான் ஆளுநரிடம் கடமை. அதன்படிதான் கடந்த 23-ம் தேதி ஆளுநர் பட்னாவிஸை அழைத்தார். எந்தெந்தக் கட்சிக்கு எத்தனை எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என்று வரிசையாக நிற்கவைத்து அவர்களை விசாரணை செய்வது ஆளுநர் பணியல்ல.

இப்போதுள்ள கேள்வி எல்லாம், 24 மணிநேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட முடியுமா என்பது மட்டும்தான். கடிதத்தில் இருக்கும் உண்மை நிலவரங்கள், சூழல் ஆகியவற்றின் அடிப்படையில்தான் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.

அஜித் பவார் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் மணிந்தர் சிங், " பட்னாவிஸை ஆட்சி அமைக்க அழைக்க ஆளுநருக்கு உரிமை இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

சிவசேனா தரப்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகையில், " 3 கட்சிகளின் சார்பில் முதல்வர் வேட்பாளராக உத்தவ் தாக்கரேதான் என்று பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுவிட்டார்.

மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அதிகாலை 5.27மணிக்கு நீக்கிவிட்டு, 8 மணிக்கு முதல்வராக பட்னாவிஸ் பதவி ஏற்கும் அளவுக்கு தேசிய அளவில் அவசரநிலை என்ன இருக்கிறது? குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கப்பட்டதில் ஒருவிதமான பாரபட்சம் இருக்கிறது. மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைக்கப்பட்டது போன்று வரலாற்றில் எப்போதும் நடந்தது இல்லை.

சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கட்சிகளுக்கு 154 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது என்று நாங்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துவிட்டோம். பாஜகவுக்குப் பெரும்பான்மை இருக்கிறதென்றால், 24 மணிநேரத்தில் அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுங்கள். பெரும்பான்மையை நிரூபிக்கும்போது அதை வீடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும். ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கூடாது" என வாதிட்டார்.

மகாராஷ்டிரா அரசு சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் முகல் ரோஹத்கி வாதிடுகையில், "பெரும்பான்மையை 24 மணிநேரத்தில் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் ஆளுநருக்கு உத்தரவிட முடியாது. ஆளுநருக்குச் சிறப்பு அதிகாரங்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன. நாளை பெரும்பான்மை நடத்த உத்தரவிடக்கூடாது. அதற்கு 7 நாட்கள்வரை ஆளுநர் அவகாசம் எடுக்கலாம்" எனத் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி சஞ்சீவ் கண்ணா, "கடந்த காலங்களில் இதுபோன்ற வழக்குகளில் பெரும்பான்மை வாக்கெடுப்பு 24 மணிநேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சில வழக்குகளில் மட்டுமே 48 மணிநேரம் வழங்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.

என்சிபி, காங்கிரஸ் சார்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிடுகையில், "என்சிபி கட்சியின் ஒரு எம்எல்ஏவான அஜித் பவாரை வைத்துக்கொண்டு ஆட்சி அமைத்துள்ளது மிக மோசமான மோசடி.

இன்றுகூட பெரும்பான்மையை நிரூபிக்க நீதிமன்றம் உத்தரவிட்டாலும் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். ஆனால், பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க இன்று ஒப்புக்கொள்ளமாட்டார்கள். 154 எம்எல்ஏக்கள் ஆதரவை நாங்கள் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்துவிட்டோம்.

அஜித் பவார் அளித்தது தன்னை எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேர்வு செய்ய அளித்த கடிதம்தான். எம்எல்ஏக்கள் அனைவரும் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாகக் கடிதம் அளிக்கவில்லை. இதை ஆளுநர் கடிதம் பெறும் போது ஏன் ஆய்வு செய்யவில்லை?

பெரும்பான்மையை நிரூபிக்கும் சோதனைக்கு இருவரும் தயாராக இருக்கிறோம். எதற்காகத் தாமதம் செய்கிறீர்கள்? எந்த என்சிபி எம்எல்ஏயாவது பாஜக கூட்டணியில் சேரப்போகிறோம் எனச் கூறினார்களா? அவர்களிடம் எம்எல்ஏக்கள் கடிதம் இருக்கிறதா? ஜனநாயகத்தில் பெரும் மோசடி செய்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பெரும்பான்மையை நிரூபிப்பது தொடர்பாக நாளை காலை 10.30 மணிக்கு உத்தரவிடுகிறோம் எனத் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in