

காஷ்மீரில் இது பூக்கள் விழும் காலம் என்பதால் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள், கையில் கூடைகளை ஏந்திச்சென்று குளிர்ந்த காலை நேரங்களில் குங்குமப் பூக்களைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளனர்.
ஸ்ரீநகருக்கு தெற்கே 13 கி.மீ. தொலைவில் உள்ளது பம்பூர் நகரம். இது குங்குமப் பூக்களுக்கான தலைநகரம். இங்கு கிடைக்கும் ஆயிரக்கணக்கான குங்குமப்பூ பூக்களிலிருந்துதான் ஊதா நிறக் கம்பளங்கள் உருவாகின்றன.
நம் ஊரில் மழைக்காலமான இப்பருவத்தை காஷ்மீரில் இலையுதிர்காலம் என்கிறார்கள். ஒவ்வொரு இலையுதிர் காலமும் அவர்களுக்குப் பூக்கள் மலரும் காலம் மட்டுமல்ல, வாழ்வின் மீதான நம்பிக்கை மலரும் காலமும் ஆகும்.
உலகின் மிக விலையுயர்ந்த மசாலாப் பொருட்களில் முக்கியப் பொருளான மணம் நிறைந்த இழைகளைப் பெறுவதற்கு ஒவ்வொரு பூவின் சூலகங்கள் மட்டுமே சிரத்தையுடன் எடுத்து உலர்த்தப்படுகின்றன. சுமார் 50,000 பூக்கள் சுமார் 500 கிராம் மசாலாவை அளிக்கின்றன.
காஷ்மீரில் கிடைக்கும் உலகின் சிறந்த குங்குமப் பூக்கள் சமையலறைகளில் மட்டுமல்ல, அழகுத் துறையிலும் ஒரு ஆடம்பர மூலப்பொருள் ஆகும். காஷ்மீரில், குங்குமப் பூ ஒரு சுவையான உள்ளூர் தேநீரான காங் கெஹ்வா எனப்படும் கிரீன் டீயில் கலந்து தரப்படுகிறது.
இந்தியா முழுவதும், இது பிரியாணி முதல் கீர் வரையிலான பல உணவுகளில் ஒரு ஒருங்கிணைந்த சுவையை அளிக்கக்கூடிய ஒரு பொருளாகும. மத்திய தரைக்கடல், ஸ்பானிஷ், மொராக்கோ மற்றும் அரபு சமையலறைகளிலும் இதற்கு முக்கியப் பங்குண்டு. இது முகக் கிரீம்கள், சோப்புகள் மற்றும் வாசனைத் திரவியங்களுக்கும் செல்கிறது.
ஈரானில் இருந்து க்ரோகஸ் சாடிவஸின் மலர்களைக் கொண்டு வந்து பயிரிட்ட முகலாயர்களே இந்தப் பயிரையும் காஷ்மீரில் முதன்முதலாக அறிமுகப்படுத்தினர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் மிகவும் வடிகட்டிய களிமண் அதற்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. பள்ளத்தாக்கில் வளர்ந்த பூக்கள் உலகம் முழுவதும் போற்றப்படுகின்றன.
இருப்பினும், இன்று, காஷ்மீர் விவசாயிகள் ஈரானிய மற்றும் ஸ்பானிஷ் இறக்குமதியிலிருந்து கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர். ஈரானிய மற்றும் ஸ்பானிஷ் குங்குமப் பூக்கள் காஷ்மீர் பூ வகைகளின் விலைகளை ஒப்பிடும்போது பாதிக்கும் குறைவாகவே விற்கப்படுகின்றன.
குங்குமப் பூ விவசாயி மிர் அஜாஸ் கூறுகையில், "உலக அளவில் பார்க்கும்போது ஈரானிய, ஸ்பானிஷ் மலர்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. அப்படியிருக்க விலையுயர்ந்த எங்கள் காங் (குங்குமப்பூ) மலர்களை அவர்கள் எப்படி வாங்குவார்கள்?'' எனக் கேட்கிறார்.
எனினும், காஷ்மீர் குங்குமப் பூக்களுக்கென்று தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. மிகவும் உன்னதமான தரத்தில் முகக் கிரீம்கள், சோப்புகள் மற்றும் வாசனைத் திரவியங்களுக்கும் செல்கிறது.
மேலும், கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக காஷ்மீரில் உற்பத்தி படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகள் குறிப்பாக மோசமாக இருந்தன. இந்த ஆண்டின் அறுவடை கொஞ்சம் சிறப்பாக அமைந்துள்ளது என்றபோதிலும், அதன் பலன்கள் எத்தகைய ஏற்றுமதியை அளிக்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை.
2010-ல் ரூ.2,372 கோடியுடன் தொடங்கப்பட்ட தேசிய குங்குமப் பூ மிஷன், இதுவரை 1,400 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது. மேலும் புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய உபகரணங்களுடன் விவசாயிகளுக்கு நவீன விதைப்பு நுட்பங்களைக் கற்பிப்பதன் மூலமும் அவர்களது மகசூல் உற்பத்திக்கு உதவி வருகிறது. இது, பூக்கள் தரத்தையும் மேம்படுத்தியதாக விவசாயிகள் கூறுகின்றனர்.