Last Updated : 25 Nov, 2019 12:28 PM

 

Published : 25 Nov 2019 12:28 PM
Last Updated : 25 Nov 2019 12:28 PM

162 எம்எல்ஏக்கள் எங்களிடம் இருக்கிறார்கள்: மகாராஷ்டிர ஆளுநரிடம் சிவசேனா, என்சிபி, காங். கடிதம்

பெரும்பான்மைக்குத் தேவையான எம்எல்ஏக்கள் எங்களிடம் இருக்கிறார்கள் என்று மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷியாரியிடம் சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கட்சிகளின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர்கள் கூட்டாக இன்று கடிதம் அளித்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தலுக்குப் பின் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாததால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு இருந்தது. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனா தலைமையில் ஆட்சி அமைக்கும் தருவாய் இருந்தபோது, கடந்த சனிக்கிழமை அதிகாலை குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கப்பட்டது.
என்சிபி மூத்த தலைவர் அஜித்பவார் ஆதரவுடன், முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றார். துணை முதல்வராக அஜித் பவார் பதவி ஏற்றார்.

ஆனால், அஜித் பவார் முடிவு தன்னிச்சையானது, என்சிபி கட்சியின் முடிவு அல்ல என்று அதன் கட்சித் தலைவர் சரத் பவார் அறிவித்தார். மேலும் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியிலிருந்தும் அஜித் பவாரை நீக்கி சரத்பவார் உத்தரவிட்டார்

மகாராஷ்டிரா ஆளுநர் பெரும்பான்மையில்லாத தேவேந்திர பட்னாவிஸை ஆட்சி அமைக்க அழைத்ததற்கு எதிராக சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன.

மேலும், குதிரை பேரத்துக்கும், எம்எல்ஏக்கள் கடத்தப்படுவதற்கு அச்சப்பட்டும் மூன்று கட்சிகளும் தங்கள் எம்எல்ஏக்களை ஹோட்டல்களில் பாதுகாப்பாக தங்கவைத்துள்ளனர்.

இந்த சூழலில் மகாராஷ்டிரா ஆளுநர் கோஷியாரியை இன்று சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கட்சிகளின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர்கள் இன்று காலை சந்தித்தனர். அவர்கள் தங்களிடம் பெரும்பான்மைக்குத் தேவையான எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என்ற கடிதத்தை ஆளுநர் அலுவலகத்தில் அளித்தனர்.

சிவசேனா சார்பில் ஏக்நாத் ஷிண்ட், காங்கிரஸ் சார்பில் பாலசாஹேப் தோரட், என்சிபி சார்பில் ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் எம்எல்ஏக்கள் ஆதரவுக் கடித்ததையும், தங்களுடைய மூன்று கட்சிகளும் சேர்ந்து மகாராஷ்டிர விகாஸ் அகாதி என்ற கூட்டணியை அமைத்துள்ளதையும் கடிதத்தில் தெரிவித்தார்கள்

அந்தக் கடிதத்தில் மூன்று கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர்களும் கூறுகையில், " தேர்தலுக்குப் பின் சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் இணைந்து மகாராஷ்டிர விகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளோம். எங்கள் மூன்று கட்சிகளுக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்.

முதல்வராகப் பதவி ஏற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸுக்கு பெரும்பான்மைக்குத் தேவையான எம்எல்ஏக்கள் இல்லை. சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் சோதனையில் பட்னாவிஸ் தோல்வி அடைந்தால், சிவசேனா தலைமையில் ஆட்சி அமைக்க அளித்த கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும்.

இந்தக் கடிதத்தோடு என்சிபி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிவசேனா கட்சிக்கு அளித்துள்ள ஆதரவுக் கடிதத்தையும், சுயேச்சை எம்எல்ஏக்கள் சிலர் அளித்துள்ள ஆதரவுக் கடிதத்தையும் இணைத்துள்ளோம். அவர்கள் சிவசேனாவுக்கு ஆதரவு அளித்துள்ளார்கள். ஆதலால், உடனடியாக சிவசேனாவை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது

கடிதம் அளித்த பின் என்சிபி மூத்த தலைவர் ஜெயந்த் பாட்டீல் நிருபர்களிடம் கூறுகையில், "எங்கள் கூட்டணிக்கு 162 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது என்பதை ஆளுநரிடம் தெரிவித்தோம். தேவேந்திர பட்னாவிஸுக்கு ஆட்சி அமைக்கும் அளவுக்கு இதற்கு முன்பும் எம்எல்ஏக்கள் இல்லை, அதனால் ஆட்சி அமைக்கவில்லை. இப்போதும் இல்லை. இருந்தும் ஆட்சி அமைத்துள்ளார்.

நாங்கள் மூன்று கட்சிகளும் சேர்ந்து 162 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளோம். தற்போதுள்ள அரசு போலியான ஆதாரங்களை அளித்து ஆட்சியில் அமர்நதுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பட்னாவிஸ் ஆட்சி கவிழும். இந்த முறை நாங்கள் ஆட்சி அமைப்போம். அதற்காகவே முன்கூட்டியே ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளோம். பட்னாவிஸ் ஆட்சி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்தால், சட்டப்பேரவை கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்படலாம் என்பதால் முன்கூட்டியே கடிதம் அளித்தோம்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x