Published : 25 Nov 2019 10:07 AM
Last Updated : 25 Nov 2019 10:07 AM

சிவசேனா, காங்கிரஸ், என்சிபி எம்எல்ஏக்கள் ஓட்டலுக்கு மாற்றம்

மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணி உடைந்த பிறகு குதிரை பேரத்தை தடுக்க பிரதான கட்சிகள் தங்கள் எம்எல்ஏக்களை நட்சத்திர ஓட்டல்களுக்கு இடமாற்றம் செய்தன. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) எம்எல்ஏக்கள் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

கடந்த 12-ம் தேதி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்ட பிறகு அனைத்து கட்சிகளின் எம்எல்ஏக்களும் வீடுகளுக்குத் திரும்பினர். சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் நேற்று முன்தினம் பதவியேற்றனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு எதிராக அவரது அண்ணன் மகன் அஜித் பவார் களமிறங்கியிருப்பதால் அந்த கட்சி உடையும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

சரத் பவார் ஏற்பாட்டின்பேரில் அந்த கட்சியின் எம்எல்ஏக்கள் மும்பையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேசியவாத காங்கிரஸுக்கு மொத்தம் 54 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் 41 எம்எல்ஏக்கள் சரத் பவாருக்கு ஆதரவு அளித்துள்ளனர் என்று உச்ச நீதிமன்றத்தில் அந்த கட்சி தெரிவித்துள்ளது. மீதமுள்ள எம்எல்ஏக்களையும் தன் பக்கம் இழுக்க சரத் பவார் முயற்சி செய்து வருகிறார்.

கடந்த 22-ம் தேதி முதல் காணாமல் போனதாகக் கூறப்பட்ட தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மாணிக்ராவ் நேற்று சரத் பவார் அணிக்கு திரும்பினார். மேலும் சில அதிருப்தி எம்எல்ஏக்கள் சரத் பவாரிடம் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி தனது எம்எல்ஏக்களை ஜெய்ப்பூருக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போதைய அவசர சூழல் காரணமாக மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலிலேயே காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சிவசேனாவின் எம்எல்ஏக்கள் விமான நிலையம் அருகில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று சந்தித்துப் பேசினார். மேலும் சரத் பவாருக்கு ஆதரவளிக்கும் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களையும் உத்தவ் தாக்கரே ஓட்டலில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் கூறும்போது, ‘‘சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கூட்டணிக்கு 165 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது’’ என்று தெரிவித்தார்.

பாஜக எம்பி சந்திப்பு

பாஜக மூத்த தலைவரும் அந்த கட்சியின் எம்பியுமான சஞ்சய் காகடே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை மும்பையில் நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு 15 நிமிடங்கள் நீடித்தது. பாஜக மூத்த தலைவர்கள் சிலரும் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்புக்குப் பிறகு நிருபர்களிடம் சஞ்சய் காகடே பேசியபோது, ‘‘தனிப்பட்ட முறையில் சரத் பவாரை சந்தித்துப் பேசினேன்’’ என்று தெரிவித்தார். மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மகாராஷ்டிர பாஜக மூத்த தலைவர் ஆசிஷ் ஷெலார் கூறும்போது, ‘‘சட்டப்பேரவையில் பாஜக அரசு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும்’’ என்று உறுதிபடத் தெரிவித்தார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது எதிரணியை சேர்ந்த எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கர்நாடகாவில் ‘ஆபரேஷன் தாமரை' மூலம் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. அதே பாணியில் மகாராஷ்டிராவில் ஆட்சியைக் தக்க வைத்துக் கொள்ள பாஜக தலைமை வியூகம் வகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x