

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஆயிரம் குதிரை வண்டிகளைப் பயன்படுத்தும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் திட்டத்துக்கு விலங்குகள் உரிமை அமைப்பு (பீட்டா) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பீட்டா அமைப்பின் இந்தியப் பிரிவு தலைமை செயல் அதிகாரி பூர்வ ஜோஷிபுரா கூறியதாவது:
அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்துக்கு விலங்குகளைப் பயன்படுத்தக் கூடாது என்று கடந்த 2012-ம் ஆண்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், பிரச்சாரத்துக்கு குதிரைகளை பயன்படுத்தப் போவதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் அறிவித்துள்ளது. இது தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிரானது. இதை தடுத்து நிறுத்துமாறு தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பாஜக சார்பில் ‘பரிவர்தன் ரத யாத்திரை’ என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா கடந்த மாதம் தொடங்கி வைத்தார்.
ஜிபிஎஸ் கருவிகள் பொருத் தப்பட்டுள்ள இந்த ரதங்களில், லாலு பிரசாத் மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவியின் 15 ஆண்டு கால ஆட்சியில் மக்களின் பாதிப்புகளை சித்தரிக்கும் வீடியோ காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அனைத்து கிராமங்களிலும் பிரச்சாரம் செய்வதற்காக 1,000 குதிரை வண்டிகள் பயன்படுத்தப்படும் என்று லாலு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “தூசு நிறைந்த, கரடுமுரடான சாலைகளுக்கு குதிரை வண்டிதான் பொருத்தமானது. அதுமட்டுமல்லாமல் இதன்மூலம் பெட்ரோல், டீசலையும் சேமிக்க முடியும். எங்கள் கட்சிக்கு வசதி படைத்தவர்களிடமிருந்து நிதியுதவி வரவில்லை. எனவே, பாஜகவின் இயந்திர சக்தியை தோற்கடிக்க குதிரை சக்தியை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.