Published : 25 Nov 2019 09:53 AM
Last Updated : 25 Nov 2019 09:53 AM

86 ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக 100 நாட்களாக முழு கொள்ளளவுடன் கிருஷ்ணராஜ சாகர் அணை: மேட்டூர் அணையும் நிகழாண்டில் நான்கு முறை நிரம்பி சாதனை

இரா.வினோத்

கர்நாடகாவில் காவிரியின் குறுக்கேஉள்ள பெரிய அணையான கிருஷ்ணராஜ சாகர் முழு கொள்ளளவுடன் (124.8 அடி) 100 நாட்களை கடந்து சாதனை படைத்துள்ளது. 1924-ல் அப்போதைய மெட்ராஸ் ராஜதானி சார்பில் காவிரி ஆற்றின் குறுக்கே மேட்டூரில் ஸ்டேன்லி அணை கட்டும் பணி தொடங்கியது. தமிழக டெல்டா பாசனத்துக்காக இப்பணி தொடங்கப்பட்டது.

இதுபோல மைசூரு மாகாண பாசன வசதிக்காக, ரங்கபட்ணா அருகேயுள்ள கண்ணம்பாடியில் 1933-ல் பொறியாளர் சர்.எம்.விஸ்வேரய்யா மூலம் புதிய அணையை அப்போதைய மைசூரு மன்னர் நான்காவது கிருஷ்ணராஜ உடையார் கட்டி முடித்தார். தொடக்கத்தில் கண்ணம்பாடி அணை என அழைக்கப்பட்ட இந்த நீர்த்தேக்கம் பின்னர், கிருஷ்ணராஜ உடையாரின் நினைவாக கிருஷ்ணராஜ சாகர் என பெயர் மாற்றப்பட்டது.

கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கேயுள்ள அணைகளில் பெரிய அணையான கிருஷ்ண ராஜசாகர் 131 அடி (39.8 மீட்டர்) உயரமும், 8600 அடி (2620 மீட்டர்) நீளமும் கொண்டது. இதில் அடிமட்டத்தில் இருந்து 124.8 அடி உயரத்துக்கு 49.452 டிஎம்சி நீரை தேக்கி வைப்பதையே முழு கொள்ளளவு என கணக்கிடப்படுகிறது. இவ்வாறு தேக்கி வைக்கப்படும் நீர் 174 மதகுகள் மூலம் காவிரி ஆற்றிலும், கால்வாய்களிலும் திறந்து விடப்படுகிறது.

கிருஷ்ணராஜ சாகர் அணை கர்நாடகா மட்டுமின்றி தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பாசன வசதியையும், குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. குடகு மலையில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் பெய்யும் பருவ மழையால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இந்த அணைக்கு நீர் வந்துசேரும். கிருஷ்ணராஜ சாகர் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில், லட்சக்கணக்கான கன அடி நீர் தமிழகத்துக்கு திறந்துவிடப்படும். இவ்வாறு திறக்கப்படும் நீர் மேகேதாட்டு, ஒகேனக்கல் அருவிகளை கடந்து மேட்டூர் அணையை அடையும்.

நிகழாண்டில் குடகில் ஜூலை மாதத்தில் கனமழை கொட்டித் தீர்த்ததால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஹேமாவதி, ஹாரங்கி, கபினி ஆகிய அணைகளைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15-ம் தேதி கிருஷ்ணராஜ சாகர் அணை முழுக் கொள்ளவை (124.8 அடி) எட்டியது.

இதனால் தமிழகத்துக்கு வினாடிக்கு அதிகபட்சமாக 2 லட்சம் கன அடிக்கு மேல் உபரிநீர் திறக்கப்பட்டது. ஜூலை மாதத்தில் 39 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து, செப்டம்பர் 7-ம் தேதி முழுக் கொள்ளளவை எட்டியது.

கிருஷ்ணராஜ சாகருக்கு தொடர்ந்து அதிக நீர் வந்துகொண்டிருந்ததால் அதே அளவு நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் மேட்டூர் அணை செப்டம்பர் 24-ம் தேதி இரண்டாவது முறையாக நிரம்பியது. அக்டோபர் 23-ம் தேதி மூன்றாம் முறையாகவும், நவம்பர் 11-ம் தேதி 4-ம் முறையாகவும் நிரம்பி வழிந்தது.

இந்நிலையில் முழு கொள்ளளவில் நீடித்த கிருஷ்ணராஜசாகர் அணை நேற்று முன்தினம் 100-வது நாளை எட்டியது. அப்போது அணைக்கு வினாடிக்கு 5,926 கன அடி நீர் வந்துகொண்டிருந்த நிலையில், 5,718 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

கிருஷ்ணராஜ சாகர் அணையின் 86 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக தொடர்ந்து நூறு நாட்கள் முழு கொள்ளளவை கடந்து அணை சாதனை படைத்துள்ளது. இதனால் மைசூரு, மண்டியா மாவட்ட விவசாயிகளும் காவிரி நீர் நிர்வாக அதிகாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பூமி பூஜை

இந்நிலையில் நேற்று காவிரி நீர் நிர்வாக அதிகாரிகளும், ஸ்ரீரங்கப்பட்ணா எம்எல்ஏ ரவீந்திராவும் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு பூமி பூஜை செய்து, காவிரி ஆற்றில் பூக்களை தூவினர். பின்னர் எம்எல்ஏ ரவீந்திரா கூறும்போது, “இது கர்நாடகாவுக்கு மட்டுமின்றி தமிழகத்துக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும்.

1911-ல் அடிக்கல் நாட்டப்பட்ட கிருஷ்ணராஜ சாகர் அணை பெரும் சிரமங்களை கடந்து 1933-ல் கட்டி முடிக்கப்பட்டது. இதற்காக தன் செல்வத்தையெல்லாம் வாரிக் கொடுத்த நான்காம் கிருஷ்ணராஜ உடையாருக்கும், திறம்பட அணையை கட்டிய விஸ்வேஸ்வரய்யாவுக்கும் நாம் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x