

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்ததை எதிர்த்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்த கடிதம், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த ஆதரவு கடிதத்தை,இன்று தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படிஇன்று காலை மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது. அப்போது முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிகிறது.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 105, அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56 தொகுதிகளைக் கைப்பற்றின. காங்கிரஸ் 44, தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களில் வெற்றி பெற்றன. சுழற்சி முறையில் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது.
இதனை பாஜக ஏற்காததால் கூட்டணி உடைந்தது. பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸுக்கு ஆளுநர் அடுத்தடுத்து அழைப்பு விடுத்தார். ஆனால் எந்த கட்சியாலும் ஆளுநரிடம் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து கடந்த 12-ம் தேதிஅந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டது.
நீண்ட இழுபறிக்குப் பிறகுசிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஆட்சியமைக்க கடந்த 22-ம் தேதி உடன்பாடு எட்டப்பட்டது. இதில் திடீர் திருப்பமாக நேற்றுமுன்தினம் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் மீண்டும் பாஜக அரசு பதவியேற்றது.
தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகப் பதவியேற்றார். இதுதொடர்பாக சிவசேனா,காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் ரமணா, அசோக் பூஷண், சஞ்சீவ் கன்னா அமர்வுமுன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
30-ம் தேதி வரை அவகாசம்
சிவசேனா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார். அவர் கூறும்போது, “ஆட்சியமைக்க பாஜகவுக்கு ஆளுநர் அழைப்புவிடுத்தது தவறான முடிவு. பெரும்பான்மையை நிரூபிக்க வரும் 30-ம் தேதி வரை ஆளுநர் அவகாசம் வழங்கியுள்ளார். இதற்கான பின்னணி என்ன? சனிக்கிழமை அதிகாலை 5.47 மணிக்கு மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்பட்டுள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. மத்திய அரசுஉத்தரவின்பேரில் ஆளுநர் செயல்படுகிறார். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு மகாராஷ்டிர சட்டப்பேரவையில் 24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.
பாஜக தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார். அவர் கூறும்போது, “மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க அனைத்து கட்சிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் எந்தவொரு கட்சியும்ஆட்சியமைக்க முன்வரவில்லை. தற்போது பாஜக ஆட்சி அமைத்துள்ளது.
அந்த கட்சி சட்டப்பேரவையில் தனதுபெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும் என்பது அனைவரும் அறிந்தது. பிரதமர் யார்என்பதை முடிவு செய்ய குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. இதேபோல முதல்வர் யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது. அவரது முடிவை நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்படுத்த முடியாது. ஆளுநரின் முடிவை எதிர்த்து எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்” என்று வாதிட்டார்.
வானமே எல்லை
அப்போது குறுக்கிட்ட நீதிபதி ரமணா, “இந்த நீதிமன்றத்தை பொறுத்தவரை வானமே எல்லை. யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுக்க ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது. அதற்காக யாரை வேண்டுமானாலும் அழைக்கமுடியாது” என்று தெரிவித்தார்.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்விவாதாடியபோது, “தேசியவாத காங்கிரஸுக்கு 54 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் 41 எம்எல்ஏக்கள் கட்சித் தலைவர் சரத் பவாருடன் உள்ளனர். கர்நாடகா வழக்கை பின்பற்றி மகாராஷ்டிர சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும். அதற்கு முன்பாக அனைவருக்கும் பொதுவான அவைத் தலைவரை நியமிக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு முழுவதையும் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்ப வேண்டும்” என்று கோரினார்.
மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அவர் கூறும்போது “மத்திய அரசு சார்பில் மட்டுமே நான் ஆஜராகி உள்ளேன். மாநில அரசுதரப்பில் என்னிடம் எதுவும் பேசவில்லை” என்று தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் கூறியதாவது:
மனுதாரர்கள் இ-மெயில் மூலம் நோட்டீஸ் அனுப்பியும் மகாராஷ்டிர அரசு தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. எனவே மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்புகிறோம். ஆட்சியமைக்க வருமாறு பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்த கடிதம், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநரிடம் அளித்த ஆதரவு கடிதத்தை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (இன்று) காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்த பிறகு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
முதல்வருக்கும் நோட்டீஸ்
அதன்படி உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது. அப்போது முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிகிறது. வழக்கு குறித்து விளக்கம் அளிக்கும்படி மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.