Published : 24 Nov 2019 07:17 PM
Last Updated : 24 Nov 2019 07:17 PM

ராமர் கோயில் கட்டுவதைத் தடுக்க பூமியில் எந்த சக்தியும் இல்லை: ராஜ்நாத் சிங் பேச்சு

ஜார்க்கண்ட் மாநிலத்தின் பிஷ்ரம்பூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் | படம்: ஏஎன்ஐ

அயோத்தியில் பிரமாண்டமான ராம் கோயில் கட்டுவதைத் தடுக்க பூமியில் எந்த சக்தியும் இல்லை என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இங்கு சட்டப்பேரவை தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டமாக நவம்பர் 30 ம் தேதி நடைபெற உள்ளது. பிஷ்ராம்பூர் சட்டப்பேரவை தொகுதியில் இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு உரையாற்றினார்.

தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

பிரான்சில் இருந்து வாங்கப்பட்டுள்ள ரஃபேல் போர் விமானங்கள் எல்லையில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும். அயோத்தியில் கோயில் கட்டுவதற்கான பாதையை உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது. அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்படும், உலகில் எந்த சக்தியும் அதை நடப்பதைத் தடுக்க முடியாது.

1952 ஆம் ஆண்டில், பாஜகவின் முன்னோடியும் பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனருமான டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி 1952ஆம் ஆண்டில் நாட்டில் இரண்டு அரசியலமைப்புகள் இருக்கமுடியாது என்றார். அதேபோல ஒருநாட்டில் இரண்டு பிரதமர்களோ இரண்டு கொடிகளோ இருக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். அவரது கனவை காஷ்மீரில் 370 வது பிரிவை ரத்து செய்ததன்மூலம் நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். தேர்தலில் என்ன வாக்குறுதி அளிதோமே அதன்படி நடந்துகொண்டோம்.

ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தின் பிம்பத்தை கெடுப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன. காங்கிரஸ் கடுமையாக முயன்றது. ஆனால் அதன் முயற்சிகள் பயனற்றவை. போர் விமானத்தை பெற நான் பிரான்சுக்கு விஜயம் செய்தேன், மேலும் நான் ஒரு போர்விமானத்திலும் பறந்து சென்றேன். ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு வருகின்றன. நாம் இப்போது எல்லைகளை கடக்க தேவையில்லை. எல்லையைத் தாண்டி பயங்கரவாத முகாம்களை குறிவைக்க எங்கள் சொந்த பிரதேசத்திலிருந்து ரஃபேலைப் பயன்படுத்தலாம். நரேந்திர மோடி அரசாங்கத்தின் கீழ் இந்தியா அடைந்த அதிகாரம் இதுதான்.

சுதந்திரத்திற்குப் பின்னர் வாக்குகளுக்காக காங்கிரஸ் மக்களை ஏமாற்றிவந்தது. முந்தைய அரசாங்கங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால் 30 ஆண்டுகளுக்கு முன்பு நாடு இந்த சக்திவாய்ந்ததாக இருந்திருக்கும். நாங்கள் 2014 இல் அரசாங்கத்தை அமைத்தபோது, ​​நாட்டின் அரசியல் அமைப்பில் நம்பிக்கையின் பற்றாக்குறை இருந்தது. நாங்கள் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு நம்பிக்கைப் பற்றாக்குறையை வெற்றிகரமாக சமாளித்தோம், நாங்கள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் செயல்படுத்தினோம்"

ஜார்க்கண்டில் இந்தவாரத்திலேயே மாவோயிச வன்முறை சம்பவங்கள் ஒன்றிரண்டு நடப்பதை நான் கண்டிருக்கிறேன். மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள பாஜக அரசாங்கங்கள் துப்பாக்கிகளைப் பயன்படுத்த யாரையும் அனுமதிக்காது என்பதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். அவர்களுக்கு பொருத்தமான பதிலடி வழங்கப்படும்,

மத்திய அரசு நலத்திட்டங்களான ஆயுஷ்மான் பாரத் யோஜனா, கிருஷி ஆஷிர்வாட் யோஜனா, பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா போன்ற முக்கிய திட்டங்களை நம் நாட்டு மக்களுக்காக நிறைவேற்றி வருகிறது, அடுத்த கட்டமாக 2026 க்குள் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் நீர் வழங்கப்படும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x