அஜித் பவார் குழப்பத்தை ஏற்படுத்த முயலுகிறார் : சரத் பவார் கண்டனம்

அஜித் பவார் குழப்பத்தை ஏற்படுத்த முயலுகிறார் : சரத் பவார் கண்டனம்
Updated on
1 min read

அஜித் பவாரின் அறிக்கை தவறானது. திசை திருப்பும் செயல், மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவும், தவறான எண்ணத்தை உருவாக்கவும் செய்யும் முயற்சி என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்வதில் மோதல் வெடித்ததால், கூட்டணி உடைந்தது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ், என்சிபி கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் இறங்கின.

3 கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உறுதியாகி இன்று ஆட்சி அமைப்பதாக இருந்த சூழலில் யாரும் எதிர்பாராத நிலையில், , தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

ஆனால், பாஜகவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தரவில்லை, அஜித் பவாரின் தன்னிச்சையான முடிவு என்று என்சிபி தலைவர் சரத் பவார் நேற்று அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் நேற்று மாலை என்சிபி கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டது.

அதில் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியில் இருந்து அஜித் பவார் நீக்கப்பட்டு ஜெயந்த் பாட்டீல் நியமிக்கப்பட்டார். முன்னதாக துணை முதல்வராக பொறுப்பேற்ற அஜித் பவாருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இதற்கு அஜித் பவார் பதில் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில் ‘‘பிரதமர் மோடிக்கு எனது நன்றி. மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி ஏற்படுவதை உறுதி செய்வோம். மக்கள் நலனுக்காக கடுமையாக உழைப்போம்’’ எனக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் மேலும் பல ட்வீட்டுகளை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் ‘‘தேசியவாத காங்கிரஸில் தான் இருக்கிறேன். அந்த கட்சியில் தான் நான் எப்போதும் இருப்பேன். சரத் பவார் தான் எனது தலைவர். மகாராஷ்டிராவில் பாஜக – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியை தரும்.

மகாராஷ்டிராவின் மேம்பாட்டுக்காகவும், மக்களின் நலனுக்காக நலனுக்காகவும் உண்மையுடன் உழைக்கும். எல்லாம் நன்றாக உள்ளது. யாரும் கவலைப்பட வேண்டாம். எனினும் கொஞ்சம் பொறுமை தேவை. உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி’’ எனக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சரத் பவார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் ‘‘மகாராஷ்டிராவில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனாவுடன் இணைந்து புதிய அரசு அமைக்கவே தேசியவாத காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும்.

அஜித் பவாரின் அறிக்கை தவறானது. திசை திருப்பும் செயல், மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவும், தவறான எண்ணத்தை உருவாக்கவும் செய்யும் முயற்சி.’’ எனக் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in