

சரத் பவார் மற்றும் அஜித் பவார் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என காணாமல் போனதாக கூறப்பட்ட என்சிபி எம்எல்ஏ தவுலத் தரோடா கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்வதில் மோதல் வெடித்ததால், கூட்டணி உடைந்தது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ், என்சிபி கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் இறங்கின.
3 கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உறுதியாகி இன்று ஆட்சி அமைப்பதாக இருந்த சூழலில் யாரும் எதிர்பாராத நிலையில், , தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
ஆனால், பாஜகவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தரவில்லை, அஜித் பவாரின் தன்னிச்சையான முடிவு என்று என்சிபி தலைவர் சரத் பவார் நேற்று அறிவித்தார்.
மகாராஷ்டிர ஆளுநர் மாளிகையில் நடந்த பதவி ஏற்பு விழாவில் அஜித் பவாருடன் இருந்த ஷாப்பூர் எம்எல்ஏ தவுலத் தரோடாவை காணவில்லை என போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அவர் பாதுகாப்புடன் இருப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தவுலத் தரோடா கூறுகையில் ‘‘நான் பாதுகாப்பாக இருக்கிறேன். தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்ற நான் வேறு கட்சிக்கு செல்லும் பேச்சுக்கே இடமில்லை. என்னை பற்றி வரும் புரளிகளை நம்ப வேண்டாம். சரத் பவார் மற்றும் அஜித் பவார் எடுக்கும் எந்த முடிவும் எனக்கு சம்மதம் தான்’’ எனக் கூறியுள்ளார்.