

2ஜி வழக்கு விசாரணையின்போது, ஷாகித் பல்வாவின் தந்தை உஸ்மான் பல்வா, குர்-ஆனை கையில் ஏந்திக்கொண்டு நீதிபதி முன் கண்ணீர் விட்டு அழுதது பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதில், நீதிமன்றம் அளித்த கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்காத ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் ஷாகித் பல்வா மீது நடவடிக்கை எடுப்பதாக நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்திருந்தார். மும்பை வழக்கறிஞர் மேமன், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் முகுல் ரோத்கி உள்ளிட்டோர் ஆஜராகி ஷாகித் பல்வா சார்பில் மன்னிப்பு கோரியிருந்தனர்.
இதன் மீதான தீர்ப்பு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. ஷாகித் பல்வாவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி சைனி உத்தரவிட்டார். தவறான பதில்களை திருத்திக் கொள்ளவும் அனுமதி அளித்தார். இந்த தீர்ப்புக் குப் பின், பதில்களை திருத்தும் நடவடிக்கை தொடங்கியது.
அப்போது, ஷாகித் பல்வாவின் தந்தை உஸ்மான் பல்வா, ஒரு கையை ஷாகித் பல்வாவின் தலையில் வைத்துக் கொண்டும் இன்னொரு கையில் குர்-ஆனை ஏந்திக்கொண்டும் நீதிபதி முன் கண்ணீர் விட்டு அழுதார். “குர்-ஆன் மீது சத்தியமாக சொல்கிறேன். என் மகன் மனப்பூர்வமாக எந்த தவறும் செய்யவில்லை. எங்களை அறியாமல் நடந்த தவறு. என் மகனை மன்னிக்க வேண்டும்” என்றார்.
இதை எதிர்பார்க்காத நீதிபதி ஓ.பி.சைனி, “நீங்கள் உங்கள் நிலையை மட்டும் தான் பார்க்கிறீர்கள். எனது நிலைமையை யாராவது யோசிக்கிறீர்களா? இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தால் நேரடியாக கண்காணிக்கப்படுகிறது. அனைத்து தரப்பினரும் இந்த வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். நான் உங்களுக்கு கருணை காட்டலாம். ஆனால், என் மீது உச்ச நீதிமன்றம் கருணை காட்டாது” என்றார்.
பின்னர் ஷாகித் பல்வாவின் சாட்சியத்தில் இருந்த தவறுகள் திருத்தப்பட்டன.
ஜாமீன் மனுவுக்கு எதிர்ப்பு
அமலாக்கப் பிரிவு தொடர்ந்துள்ள மற்றொரு வழக்கில், கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர். இதற்கு அமலாக்கப் பிரிவு சார்பில் எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீது ஜூன் 3-ம் தேதி விசாரணை நடைபெறும் என நீதிபதி அறிவித்தார். வழக்கில் இருந்து தன்னை முழுமையாக விடுவிக்க வேண்டும் என்று தயாளு அம்மாள் தாக்கல் செய்துள்ள மனுவும் அதே நாளில் விசாரணைக்கு வரவுள்ளது.
ஜூன் 3-ம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் என்பதால், அன்று நேரில் ஆஜராக விலக்கு அளிக்கும்படி, ஆ.ராசா, கனிமொழி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி சைனி மறுநாள் 4-ம் தேதி ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க உத்தரவிட்டார்.