

அயோத்தி வழக்கில் பாபர் மசூதி அமைந்திருந்த நிலம், இந்து தரப்பினரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, உபி சன்னி முஸ்லிம் மத்திய வஃக்பு வாரியம் தனது சொத்துப் பட்டியலில் இருந்து பாபர் மசூதியின் பெயரை நீக்கும் நடவடிக்கை துவக்கப்பட்டு உள்ளது.
நாட்டில் உள்ள முஸ்லிம் சொத்துக்களை காத்து, பராமரிப்பதற்காக வஃக்பு வாரியம் சட்டம், மத்திய அரசால் 1954 ஆம் ஆண்டு அமலாக்கப்பட்டது. அதே ஆண்டு உத்திரபிரதேச மாநிலத்தில், ’உபி சன்னி முஸ்லிம் மத்திய வஃக்பு வாரியம்’ துவக்கப்பட்டது.
இவ்வாரியத்தில், அயோத்தியில் 1528 ஆம் ஆண்டில் கட்டப்பட்டிருந்த பாபர் மசூதி உள்ளிட்ட அம்மாநிலத்தின் சன்னி பிரிவினரின் அனைத்து மசூதிகளும் கொண்டுவரப்பட்டன. அதேசமயம், பாபர் மசூதி அமைந்த நிலம் யாருக்கு சொந்தம் எனும் வழக்கு 1949 இல் பைஸாபாத் சிவில் நீதிமன்றத்தில் துவங்கியது.
இந்த வழக்கின் மேல்முறையீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 9 ஆம் தேதி தீர்ப்பு அளித்திருந்தது. அதில், பாபர் மசூதி அமைந்திருந்த 2.77 ஏக்கர் நிலம் இந்து தரப்பினரிடம் ஒப்படைத்து அங்கு கோயில் கட்ட மத்திய அரசு ஒரு அறக்கட்டளை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினால் பாபர் மசூதியுடன் அது அமைந்திருந்த நிலத்தையும் உபி சன்னி முஸ்லிம் மத்திய வஃக்பு வாரியம் இழந்துள்ளது. இதனால், தனது சொத்து பட்டியலில் பாபர் மசூதியின் பெயரை நீக்கும் நடவடிக்கையை அந்த வாரியம் துவக்கி உள்ளது.
இதன் மீது தன் நிர்வாகிகள் ஆலோசனை செய்து முடிவு எடுக்கும் பொருட்டு அதை, நவம்பர் 26 இல் நடைபெறும் கூட்டத்தின் நிகழ்வில்(அஜண்டா) இணைத்துள்ளது.
சன்னி வாரியத்தின் இந்த கூட்டம் அயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து இறுதி முடிவு எடுக்க லக்னோவில் கூடுகிறது.
இதே கூட்டத்தில் பாபர் மசூதி இருந்த 2.77 ஏக்கருக்கு பதிலாக வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கும் உச்ச நீதிமன்ற உத்தரவின் மீதும் ஆலோசனை செய்யப்பட உள்ளது. இதில், தனது சொத்து பட்டியலில் பாபர் மசூதியின் பெயரையும் நீக்க முடிவு செய்ய உள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் உபி சன்னி முஸ்லிம் மத்திய வஃக்பு வாரியத்தின் வட்டாரம் கூறும் போது, ‘எங்கள் தலைவர் ஜுபர் சித்திக்கீ உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு அளிக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இதனால், இறுதி முடிவு எடுக்க வாரியத்தின் நிர்வாகிகள் அனைவரும் கூடும் கூட்டத்தில் சொத்து பட்டியலில் இருந்து பாபர் மசூதி அகற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இதை உடனடியாக செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதனால், பெரிதாக எந்த வித்தியாசமும் ஏற்படப் போவதில்லை.’ எனத் தெரிவித்தனர்.
உபி சன்னி முஸ்லிம் மத்திய வஃக்பு வாரியத்திடம் மசூதிகள் உள்ளிட்ட சுமார் 23 லட்சம் சொத்துக்கள் உள்ளன. இதில் 26 ஆவது சொத்தாக பாபர் மசூதி பைஸாபாத் மாவட்டத்தில் உள்ளதாக அதன் நிலதஸ்தாவேஜில் பதிவாகி உள்ளது.
இதை அப்பட்டியலில் இருந்து நீக்கினாலும், அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் எடுத்த முடிவின்படி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு அளிக்க எந்த தடையும் கிடையாது எனக் கருதப்படுகிறது.