Published : 24 Nov 2019 02:00 PM
Last Updated : 24 Nov 2019 02:00 PM

அஜித் பவார் நீக்கம்: மகாராஷ்டிரா ஆளுநர் அலுவலகத்தில் என்சிபி தலைவர் ஜெயந்த் பாட்டீல் விளக்கம்

மகாராஷ்டிரா தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியில் இருந்து அஜித் பவார் நீக்கப்பட்ட விவரத்தை ஆளுநர் மாளிகையில் என்சி தலைவர் ஜெயந்த் பாட்டீல் இன்று முறைப்படி தெரிவித்தார்

ஆளுநர் கோஷியாரியைச் சந்திக்க ஜெயந்த் பாட்டீல் சென்றபோது அவர் அங்கு இல்லை. இதையடுத்து ஜெயந்த் பாட்டீல், அஜித் பவார் நீக்கப்பட்டதற்கான கடித்தையும், பதற்காலிக சட்டப்பேரவைக் குழுக்தலைவராக தான் தேர்வு செய்யப்பட்ட விவரத்தையும் அதற்கான கடிதத்தையும் அளித்தார்

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்துக்குப்பின், காங்கிரஸ், என்சிபி கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் இருந்தது.

3 கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உறுதியாகி ஆட்சி அமைப்பதாக இருந்த சூழலில் யாரும் எதிர்பாராத நிலையில், என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் நேற்று காலை பதவியேற்றனர். மாநிலத்தில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சியும் நீக்கப்பட்டது.

ஆனால் அஜித் பவார் தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளார்.கட்சியின் முடிவு அல்ல என்று என்சிபி கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவித்தார். இதைத் தொடர்ந்து நேற்று மாலை என்சிபி கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் சட்டப்பேரவைக் குழுத்தலைவராக இருந்த அஜித் பவார் நீக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவரிடம் இருந்த கொறடா அதிகாரமும் பறிக்கப்பட்டது. தற்காலிக தலைவர் ஜெயந்த் பாட்டீல் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் சட்டப்பேரவைக் குழுத்தலைவர் பதவியில் இருந்து அஜித் பவார் நீக்கப்பட்டதை முறைப்படி இன்று ஆளுநர் கோஷியாரிடம் தெரிவிக்க ஜெயந்த் பாட்டீல் ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். ஆனால், அங்கு ஆளுநர் இல்லை என்பதால், அதற்குரிய கடித்ததை முறைப்படி அளித்துவிட்டு, தன்னுடைய தேர்வு குறித்த விளக்கத்தையும் அளித்து திரும்பினார்

ஆளுநர் மாளிகைக்கு வெளியே ஜெயந்த் பாட்டீல் நிருபர்களிடம் கூறுகையில், " என்சிபி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடந்த விவரத்தையும், அதில் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியில் இருந்து அஜித் பவார் நீக்கப்பட்டதையும் ஆளுநரிடம் கடிதம் வாயிலாக முறைப்படி தெரிவித்தோம்.

அஜித் பவாரின் முடிவை திரும்பப் பெறுமாறு அவரிடம் பேசி வருகிறோம். இன்று நண்பகலுக்குப்பின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சனிக்கிழமை நடந்த கூட்டத்தில் பங்கேற்காத எம்எல்ஏக்கள் இன்றைய கூட்டத்தில் ஆஜராவார்கள். துணிச்சல் உள்ளவர்கள் எதையும் இழக்கமாட்டார்கள். அஜித் பவாரை நாங்கள் சமாதானப்படுத்துவோம்" எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x