போலி ஆவணங்கள் மூலம் பட்னாவிஸை முதல்வராக்கியுள்ளார் ஆளுநர்: சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மும்பையில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்த காட்சி : படம் ஏஎன்ஐ
சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மும்பையில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்த காட்சி : படம் ஏஎன்ஐ
Updated on
1 min read

சிவசேனா,என்சிபி, காங்கிரஸ் கூட்டணிக்கு 165 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது, எங்களால் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்வதில் மோதல் வெடித்ததால், கூட்டணி உடைந்தது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ், என்சிபி கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் இறங்கின.

3 கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உறுதியாகி இன்று ஆட்சி அமைப்பதாக இருந்த சூழலில் யாரும் எதிர்பாராத நிலையில், , தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

ஆனால், பாஜகவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தரவில்லை, அஜித் பவாரின் தன்னிச்சையான முடிவு என்று என்சிபி தலைவர் சரத் பவார் நேற்று அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் நேற்று மாலை என்சிபி கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியில் இருந்து அஜித் பவார் நீக்கப்பட்டு ஜெயந்த் பாட்டீல் நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே மகாராஷ்டிரா ஆளுநர் கோஷியாரின் செயல் பாரபட்சமானது, தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்திவிட்டார் என்று கூறி உடனடியாக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

இந்த சூழலில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நிருபர்களுக்கு இன்று மும்பையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், " போலியான ஆவணங்கள் அடிப்படையில் மகாராஷ்டிரா ஆளுநர் கோஷியாரி, பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக பதவி ஏற்க வைத்துள்ளார். போலியான ஆவணங்கள் அடிப்படையில் புதிய அரசும் அமைந்துள்ளது. புதிதாக அமைந்துள்ள அரசு பெரும்பான்மையை நிரூபிக்க நவம்பர் 30-ம் தேதிவரை ஆளுநர் அவகாசம் அளித்துள்ளார். இதன் மூலம் எதிரணிகளை இழுக்க வசதி செய்து கொடுத்துள்ளார்

ஆனால், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 165 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது. ஆளுநர் எங்களை அழைத்து எம்எல்ஏக்களை அடையாளப்படுத்தக் கூறினால், 10 நிமிடங்களில் எங்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும்.

எங்களைப் பொறுத்தவரை மகாராஷ்டிரா வரலாற்றில் நவம்பர் 23-ம் தேதி என்பது கறுப்பு சனிக்கிழமை. காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி அவசரநிலையை அமல்படுத்தியதைக் கறுப்பு நாள் என்று கூறுவதற்கு பாஜகவுக்கு எந்த உரிமையும் இல்லை. பாஜகவுக்கு சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமானவரித்துறை, போலீஸார் ஆகியோர்தான் முக்கியமான வேலைக்காரர்கள். தற்போதுள்ள ஆளுநரும் முக்கிய வேலைக்காரர்தான். ஆனால் இப்போது பாஜக தான் விரித்த வலையில் சிக்கி இருக்கிறது. இது முடிவின் தொடக்கம் " எனத் தெரிவித்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in