

இரா.வினோத்
பெங்களூரு
கர்நாடகாவில் 2006-ம் ஆண்டு தேவகவுடாவுக்கு தெரியாமல் அவரது மகன் குமாரசாமி திடீரென பாஜகவுடன் இணைந்து ஆட்சியமைத்தார். தற்போது மகாராஷ்டிராவிலும் அதேபோல் சரத் பவாரின் உறவினர் அஜித் பவார் பாஜகவுடன் கைக்கோத்திருக்கிறார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் இரவு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவெடுத்தார். உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்கப் போகிறார் என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்ட நிலையில், சரத் பவாரின் உறவினர் அஜித் பவார் யாரும் எதிர்பாராத வகையில் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் பாஜக பக்கம் சாய்ந்தார்.
இதையடுத்து, நேற்று அதிகாலை தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். மகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறிய திடீர் காட்சிகளால் இந்திய அரசியல் அரங்கமே அதிர்ந்து போய் இருக்கிறது.
இந்நிலையில், இதே காட்சிகளும், திரைக்கதையும் கர்நாடகாவில் கடந்த 2006-ம் ஆண்டு அரங்கேறியது.
கர்நாடகாவில் 2004-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவெடுத்தது. காங்கிரஸை சேர்ந்த தரம்சிங் முதல்வராக பொறுப்பேற்ற நிலையில், அப்போது மஜதவில் இருந்த சித்தராமையா துணை முதல்வராக பதவியேற்றார்.
இந்த சூழ்நிலையில், 2006-ம் ஆண்டு தேவகவுடாவின் மகன் குமாரசாமி திடீரென மஜதவில் இருந்த 58 எம்எல்ஏக்களில் 46 பேரை பிரித்துக்கொண்டு பாஜக பக்கம் சென்றார். இதனால் தரம்சிங் தலைமையிலான காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. பாஜகவுடன் குமாரசாமி கூட்டணி அமைத்து அவர் முதல்வராகவும், எடியூரப்பா துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அப்போது தேவகவுடா, ‘‘இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. குமாரசாமியின் முடிவால் குடும்பத்திற்குள்ளும், கட்சிக்குள்ளும் பிரளயமே ஏற்பட்டுவிட்டது. எனவே அவரை என் குடும்பத்தில் இருந்தும், மஜதவில் இருந்தும் விலக்கி வைக்கப் போகிறேன்'' எனக் கூறியிருந்தார்.
தெரிந்தே நடைபெற்ற நாடகமா?
ஆனால் அடுத்த சில வாரங்களில் தேவகவுடாவும், குமாரசாமியும் சமரசமாகினர். இதனால், மஜத - பாஜக கூட்டணி ஏற்பட்டதே இருவரும் இணைந்து செயல்படுத்திய நாடகத்தால்தான் என்பது தெரியவந்தது. தற்போது இதே பாணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் கருத்து தெரிவித்து வருகிறார்.
எனவே, பாஜக - தேசியவாத காங்கிரஸ் இடையே திடீர் கூட்டணி ஏற்பட்டதும் சரத்பவாருக்கு தெரிந்தே நடைபெற்ற நாடகமா என கேள்வியெழுந்துள்ளது.