

புதுடெல்லி
கோயில்களின் நிர்வாகத்தை அரசு கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வகை செய்யும் தனி நபர் மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
மக்களவையில், பாக்பத் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.பி. சத்யபால் சிங், அரசமைப்பு சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: சிறுபான்மை இன மக்களுக்கு வழங்கப்படும் சிறப்பு உரிமைகள், இந்துக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்து வதே இந்த தனி நபர் மசோதா வாகும்.
சிறுபான்மை இனத்தவர், தங் களது மத வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்களை தமது சொந்த விதிகளின்படி நிர்வகிக்க அரசமைப்புச் சட்டம் வழிவகை செய்கிறது. ஆனால் இந்துக்கள் அதுபோன்று வழி பாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங் களை நடத்துவதற்கும் அனுமதி கிடைப்பதில்லை. ஷிர்டி, திருப்பதி கோயில்களை, அரசுகளே நிர் வகித்து நடத்துகின்றன. சிறு பான்மை இன மக்களுக்குக் கிடைக்கும் உரிமைகள் இந்துக் களுக்கும் தரப்படவேண்டும் என் பதை இந்த மசோதா வலியுறுத்து கிறது. இந்துக் கோயில் நிர்வாகங் களை அரசு கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பதற்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
கேரள கட்சி ஆதரவு
இதனிடையே இந்து கோயில்கள் மீது அரசின் கட்டுப்பாட்டைத் தடுக்கும் தனி நபர் மசோதாவை,பாஜக எம்.பி. சத்யபால் சிங் கொண்டு வந்ததற்கு கேரளாவைச் சேர்ந்த ஜனநாயக சமூக நீதிக் கட்சி (டிஎஸ்ஜேபி) ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்துக் கோயில்களின் வருமானத்தை எடுத்து மத்திய, மாநில அரசுகள் மற்றவர்களின் நலன்களுக்கு செலவழிக்கின்றன. இதைத் தடுக்க உதவும் இந்து கோயில்கள் தொடர்பான தனி நபர் மசோதாவை எங்கள் கட்சி வரவேற்கிறது என்று அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
மக்கள்தொகை கட்டுப்பாடு
மக்கள் தொகையைக் கட்டுப் படுத்த வகை செய்யும் தனிநபர் மசோதாவும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த சுதந்திர தின விழாவில் பேசும்போது, அதிகரித்து வரும் நாட்டின் மக்கள் தொகை குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
அப்போது மோடி பேசும்போது, “சிறிய குடும்பங்களாக வசிக்கும் மக்களை நாம் கவுரவிக்க வேண்டும். அவர்களை எடுத்துக் காட்டாக கொண்டு, சிறிய குடும் பங்கள் பற்றி யோசிக்காத பிற மக்களை நாம் சிந்திக்க வைக்க வேண்டும். மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து நாம் கவலை கொள்ள வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாஜக எம்.பி. அஜய் பட் ‘மக்கள் தொகை கட்டுப்பாடு’ என்ற பெயரில் தனிநபர் மசோதா ஒன்றை நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார்.
நைனிடால் உதம்சிங் நகர் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.பி.யான இவர் தன்னுடைய தனிநபர் மசோதாவில் கூறியுள்ளதாவது:
2 குழந்தை
ஒரு தம்பதி இரண்டு குழந்தை களுக்கு மேல் பெற்றுக் கொள்ள கூடாது. அதற்கு மேல் குழந்தை கள் பெற்றால் அரசின் நலத்திட் டங்களை அவர்களுக்கு அளிக்கக் கூடாது. மேலும் அவர்களிடமிருந்து ரூ. 50 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்க வேண்டும்.
சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக திகழ்கிறது இந்தியா. மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க நாட்டில் வறுமை, வேலையில்லா திண்டாட்டம், வளர்ச்சியில் மந்த நிலை ஆகியவை ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும்.
பெற்றோருக்கு விலக்கு
முதல் குழந்தைக்கு பின்பு இரட்டைக் குழந்தைகள் அல்லது மூன்று குழந்தைகள் பிறந்தால் அந்த பெற்றோருக்கு விலக்கு தரப்படும். எனினும் இதற்காக மாவட்ட அதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டும். இதற்காக மாநில அரசுகளும் மாவட்டம் தோறும் கமிட்டிகளை உருவாக்க வேண்டும்.
அந்த கமிட்டி இந்த திட்டம் முறையாக செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்யும். இந்த திட்டத்தை அமல்படுத்த ரூ. 500 கோடி ஆண்டுதோறும் தேவைப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்களவையில் தாக்கல் செய் யப்படும் தனிநபர் மசோதாக்கள் வெகு குறைவான அளவிலேயே நிறைவேறியுள்ளன. இதுநாள் வரையில் தனி நபர் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டவற்றில், 14 மசோதாக்களே சட்டங்களாக மாறியுள்ளன. ஆனால் சில நேரங்களில் இம்மசோதா வாதத்திற்கு கூட எடுத்துக் கொள்ளப்படாத நிலை உள்ளது.
கடைசியாக 1970-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் குற்றவியல் மேல்முறையீட்டு அதிகார வரம்பை விரிவுபடுத்துதல் மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
28 மசோதா
இந்நிலையில் நேற்று மட்டும் மக்களவையில் 28 தனிநபர் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட் டன. கல்வி நிறுவனங்களில் வேத பாடத்தைக் கட்டாயமாக்குவதற்கு வகை செய்யும் மசோதா, ஐ.நா.வின் பரிந்துரைப்படி ஒவ்வொரு குழந்தையும் விளையாடுவதை உரிமையாக்கும் மசோதா, இந்து கோயில்களை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கும் மசோதா, அபினி செடியைப் பயிரிடுவோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வகை செய்யும் மசோதா, நாகரிகமற்ற விளம்பர காட்சிகளுக்குத் தடை விதிக்கும் மசோதா, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்க வழிவகை செய்யும் மசோதா உள்ளிட்ட 28 மசோதாக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. - பிடிஐ