Last Updated : 23 Nov, 2019 10:03 PM

 

Published : 23 Nov 2019 10:03 PM
Last Updated : 23 Nov 2019 10:03 PM

54-க்கு 49 எம்எல்ஏக்கள் ஆஜர்; என்சிபி சட்டப்பேரவைக் குழு தலைவர் பதவியில் இருந்து அஜித் பவார் நீக்கம்: சரத் பவார் அதிரடி

என்சிபி கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் மும்பையில் நடந்த காட்சி : படம் ஏஎன்ஐ

மும்பை

மகாராஷ்டிராவில் பாஜகவுடன் சேர்ந்து துணை முதல்வராகப் பதவி ஏற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவாரை சட்டப்பேரவைக் குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கி கட்சியின் தலைவர் சரத் பவார் அதிரடியாக அறிவித்துள்ளார்.

என்சிபிக்கு புதிய சட்டப்பேரவைக் குழு தலைவர் தேர்வு செய்யப்படும் வரை ஜெயந்த் பாட்டீல் சட்டப்பேரவைக் குழு தலைவராகச் செயல்படுவார் என்று சரத் பவார் அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்வதில் மோதல் வெடித்ததால், கூட்டணி உடைந்தது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ், என்சிபி கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் இறங்கின.

3 கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உறுதியாகி இன்று ஆட்சி அமைப்பதாக இருந்த சூழலில் யாரும் எதிர்பாராத நிலையில், , தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

ஆனால் இது என்சிபி கட்சியின் முடிவல்ல, அஜித் பவாரின் தன்னிச்சையான முடிவு என்று என்சிபி கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவித்தார். மாலையில் என்சிபி கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தையும் கூட்டி அதில் அஜித் பவார் நீக்கப்படுவார் என்று அறிவித்தார்.

அதன்படி மும்பையில் ஒய்பி சவான் மையத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் அஜித் பவாரின் செயல்கள் குறித்தும், அவர் பாஜகவுக்கு தன்னிச்சையாக ஆதரவு அளித்தது தொடர்பாகவும் விவாதித்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் என்சிபி கட்சியின் எம்எல்ஏக்கள் 54 பேரில் 49 பேர் பங்கேற்றதாகச்செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து என்சிபி தலைவர் சரத் பவார் கூறுகையில், "கட்சியில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி அஜித் பவார் சட்டப்பேரவைக் குழு தலைவர் பதவியில் நீக்கப்படுவதாகவும், கட்சியின் கொறடா பதவியில் இருந்தும் நீக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதிய சட்டபேரவைக் குழு தலைவர் தேர்வு செய்யப்படும்வரை ஜெயந்த் பாட்டீல் தலைவராகச் செயல்படுவார். அவருக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படுகின்றன" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் என்சிபி கட்சி தங்களின் எம்எல்ஏக்களைப் பாதுகாக்க மும்பையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்க வைப்பதற்காக சொகுசு பஸ்ஸில் அழைத்துச் சென்றனர். அதேபோல காங்கிரஸ் கட்சியும் தங்களின் எம்எல்ஏக்களை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x