

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார் என்பது சிவசேனா, பாஜக இடையே கவுரப்பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், 2-வது முறையாக முதல்வராகத் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் துணையுடன் ஏற்றுள்ளார்.
ஆனால், இந்த முதல்வர் பதவி தேவேந்திர பட்னாவிஸுக்கு நிலைக்குமா அல்லது நீடிக்குமா என்பது தேசியவாத காங்கிரஸ் பிளவுபடுவதில்தான் இருக்கிறது.
மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வென்றன. மற்றொரு புறம் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் 44 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 இடங்களிலும் வென்றன.
இதில் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட அதிகாரப் போட்டியால், 30 ஆண்டுகளுக்கும் மேலாக நட்புறவுடன் இருந்த பாஜக -சிவசேனா கூட்டணி முறிந்தது. முதல்வராக வேண்டும் என்ற கவுரவப் போட்டியால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை சிவசேனா தொடங்கியது.
பாஜகவுடன் கூட்டணியை முறித்ததிலிருந்தே தங்களுக்கு 170 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது கூறிய சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்து காய்களை நகர்த்தியது. சித்தாந்தரீதியாகவும், கொள்கைரீதியாகவும் எதிர் துருவங்களாக இருக்கும் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் சிவசேனாவுடன் இணைவார்களா என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
ஆனால், பலகட்டப் பேச்சுக்குப் பின் குறைந்த செயல் திட்டத்தைத் தீட்டி ஆட்சி அமைக்கும் பணியில் மூன்று கட்சிகளும் ஈடுபட்டன. சிவசேனா, காங்கிரஸ், என்சிபி இடையே இறுதி முடிவு எட்டி இன்று 3 கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைக்க ஆளுநரிடம் கோருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக வருவார். அதற்கு காங்கிரஸ், என்சிபி சம்மதித்துவிட்டோம் என சரத் பவாரும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால், திடீர் திருப்பமாக நள்ளிரவுக்குள் நடந்த மாற்றமாக பாஜக, என்சிபி இடையே கூட்டணி அமைந்து இன்று காலை ஆட்சி அமைக்கப்பட்டது.
மகாராஷ்டிரா முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் 2-வது முறையாகவும், துணை முதல்வராக என்சிபி தலைவரும், சரத் பவாரின் சகோதரருமான அஜித் பவாரும் பதவி ஏற்றனர்.
ஆனால், இந்த முடிவு கட்சியின் முடிவல்ல. அஜித் பவாரின் தன்னிச்சையான முடிவு என்று என்சிபி கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவித்தார். மேலும், சில எம்எல்ஏக்கள் மட்டுமே அஜித் பவார் பக்கம் இருக்கிறார்கள். அவர்களும் திரும்பிவிடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த சூழலில் என்சிபி கட்சி தனது எம்எல்ஏக்கள் கூட்டத்தை இன்று மாலை கூட்டியது. அதில் என்சிபி எம்எல்ஏக்கள் 54 பேரில் 49 பேர் கூட்டத்தில் பங்கேற்றார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. 5 எம்எல்ஏக்கள் மட்டுமே அஜித் பவாரின் பக்கம் உள்ளனர்.
மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரி தேவேந்திர பட்னாவிஸை முதல்வராகப் பதவி ஏற்க வைத்ததற்கு எதிராகவும், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரியும் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளன.
ஆனால் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இன்னும் எத்தனை நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் பகத்சிங் கோஷியாரி இதுவரை வெளிப்படையாக அறிவிக்காதது கேள்விக்குரியதாக இருக்கிறது.
ஆட்சிக் கணக்கு
இப்போது பாஜக ஆட்சி மாநிலத்தில் நீடிக்க வேண்டுமானால், பெரும்பான்மைக்கு 145 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. பாஜகவிடம் 105 எம்எல்ஏக்களும், சுயேச்சை, சிறுகட்சிகள் என சேர்த்து குறைந்தபட்சம் 119 எம்எல்ஏக்கள் தேறுவார்கள் என்று கூறப்படுகிறது.
சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக வசம் இருக்கும் 119 எம்எல்ஏக்கள் தவிர இன்னும் 26 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. ஆனால், அஜித் பவார் வசமோ தற்போது 5 எம்எல்ஏக்கள் மட்டுமே இருக்கிறார்கள். நிச்சயமாக இந்த எண்ணிக்கையில் ஆட்சியில் அமர முடியாது.
ஆட்சி அமைக்கத் தேவையான 26 எம்எல்ஏக்களை தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரித்தால் பிரிந்து செல்லும் எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு பதவி பறிக்கப்படும். ஆனால், மூன்றில் இரு பங்கு எம்எல்ஏக்கள் என்சிபி கட்சியில் இருந்து விலகிச் சென்றால் அது கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் வராது. அதாவது, என்சிபி கட்சியில் இருக்கும் 54 எம்எல்ஏக்களில் குறைந்தபட்சம் 38 எம்எல்ஏக்கள் விலகி பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தால், அல்லது விலகி பாஜகவில் இணைந்தால், அது கட்சித் தாவல் சட்டத்தில் வராது.
தப்புமா பாஜக ஆட்சி?
ஆனால் என்சிபி கட்சி தங்களின் எம்எல்ஏக்களைப் பாதுகாக்கத் தொடங்கிவிட்டதால் 38 எம்எல்ஏக்களைப் பிரிப்பது என்பது சாத்தியமா என்பது கேள்விக்குறியாகும். மற்றொரு பக்கம் காங்கிரஸ் கட்சி தங்களின் எம்எல்ஏக்களை ராஜஸ்தானுக்குப் பத்திரமாக அனுப்பவும் தயாராகிவிட்டது. சிவசேனா பக்கம் எம்எல்ஏக்களை இழுக்க பாஜக முயலாது.
ஆகவே, தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைத்தோ அல்லது உடைந்தோ 38 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு அளித்தால் மட்டுமே தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு தப்பிப் பிழைக்கும்.
ஒருவேளை சரத் பவார் தனது பழுத்த அரசியல் அனுபவத்தால், அரசியல் காய்களை நகர்த்தி எம்எல்ஏக்களைப் பாதுகாத்துவிட்டார் அல்லது கட்சியை உடையாமல் காப்பாற்றிவிட்டார் என்றால் பாஜக அரசு நீடிக்க வாய்ப்பு குறைவுதான்.
பாஜக அரசு நீடிப்பதும், கவிழ்வதும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அழிவில்தான் இருக்கிறது.