

மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரி, தேவேந்திர பட்னாவிஸை ஆட்சி அமைக்க அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆளுநரின் செயல் தன்னிச்சையானது என்று கூறி சிவசேனா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று இரவே அவசர வழக்காக எடுத்து விசாரிக்கவும் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்வதில் மோதல் வெடித்ததால், கூட்டணி உடைந்தது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ், என்சிபி கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் இறங்கின.
3 கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உறுதியாகி இன்று ஆட்சி அமைப்பதாக இருந்த சூழலில் யாரும் எதிர்பாராத நிலையில், என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் பதவியேற்றனர். ஆனால், சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் மூன்றும் சேர்ந்து பெரும்பான்மைக்குத் தேவையான 145 எம்எல்ஏக்களுக்கு அதிகமாக வைத்திருந்தும் அவர்களை ஆளுநர் கோஷியாரி ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. ஆனால், 105 எம்எல்ஏக்கள் மட்டுமே வைத்திருந்த பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார்.
ஆளுநர் கோஷியாரின் இந்தச் செயல் குறித்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், "மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக எந்த விஷயத்தையும் பொது வெளிக்குக் கொண்டுவராமல் தேவேந்திர பட்னாவிஸ் அல்லது பாஜகவை ஆட்சி அமைக்க 22-11-2019 நள்ளிரவு முதல் 23-11-2019 அதிகாலைக்குள் எந்த அடிப்படையில்,எந்த சாத்தியக்கூறில் ஆளுநர் அழைத்தார்?
முதல்வராக தேவேந்திர பட்னாவிஸுக்கு 144 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது என்ற கடிதம் பொதுவெளிக்கு இதுவரை வெளியிடப்படவில்லை. சட்டரீதியாக அது சாத்தியமும் இல்லை. சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் எம்எல்ஏக்கள், அஜித் பவாரைத் தவிர அனைவரும் அந்தக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்.
இந்த சூழலில் ஆளுநர் கோஷியாரி, தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தது தன்னிச்சையானது. அவர் சார்ந்திருக்கும் ஆளுநர் அலுவலகத்தை கேலிக்குரியதாக்க மாற்றியுள்ளார். 22-11-2019 நள்ளிரவு முதல் 23-11-2019 அதிகாலைக்குள் ஆளுநர் கோஷியாரின் செயல்கள், மத்தியில் ஆளும் அரசியல் கட்சிக்கு சார்பானது என்பதையே காட்டுகிறது
தேவேந்திர பட்னாவிஸுக்கு பெரும்பான்மைக்குத் தேவையான 145 எம்எல்ஏக்கள் இல்லை. 40 எம்எல்ஏக்கள் குறைவாக உள்ளனர். கடந்த 10-ம் தேதி ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்தபோது, தங்களுக்குப் பெரும்பான்மை இல்லை எனக் கூறி ஆட்சி அமைக்க மறுத்துவிட்டார். ஆதரவு திரட்டக் கூடுதலாக அவகாசம் கேட்டார். ஆனால், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்குப் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் இருந்தும் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கவில்லை.
ஆதலால், மகாராஷ்டிர சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்டுவதற்கு உத்தரவிட்டு, பெரும்பான்மையை முதல்வர் பட்னாவிஸ் நிரூபிக்க உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.