

கிரிக்கெட் போட்டியும், அரசியலும் ஒன்றுதான் என்று நான் அன்றே சொன்னேன் அது நடந்துவிட்டது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலகலப்பாகத் தெரிவித்துள்ளார்
மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்வதில் மோதல் வெடித்ததால், கூட்டணி உடைந்தது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ், என்சிபி கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் இறங்கின.
3 கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உறுதியாகி இன்று ஆட்சி அமைப்பதாக இருந்த சூழலில் யாரும் எதிர்பாராத நிலையில், என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் பதவியேற்றனர்.
மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின் கட்கரி நாக்பூரில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள அரசியல் திருப்பம் குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு நிதின் கட்கரி பதில் அளிக்கையில், " நான் அன்றே சொன்னேன். கிரிக்கெட்டிலும், அரசியலும் ஒன்றுதான். களத்தில் எதுவேண்டுமானாலும் கிரிக்கெட்டிலும், அரசியலிலும் நடக்கும். நான் கூறிய வார்த்தையின் முக்கியத்துவத்தை இப்போது அனைவரும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
முதல்வராக பதவி ஏற்றுள்ள பட்னாவிஸ், துணை முதல்வர் அஜித் பவாருக்கு எனது வாழ்த்துகள் ஆளுநர் அளித்துள்ள அவகாசத்தின்படி, சட்டப்பேரவையில் அவர்கள் பெரும்பான்மையை நிரூபிப்பார்கள். பட்னாவிஸ், அஜித் பவார் தலைமையில் மகாராஷ்டிராவில் நிலையான அரசு அமைந்து, வளர்ச்சிக்கு வழி செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன்" எனத் தெரிவித்தார்
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ராஞ்சியில் நேற்று அளித்த பேட்டியில் கூட கிரிக்கெட், அரசியல் கருத்தை முன் வைத்திருந்தார். அவர் நேற்று அளித்த பேட்டியில் " சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி சித்தாந்த ரீதியாக, கொள்கை ரீதியாக மாறுபட்ட சிந்தனை உள்ளவர்கள். இவர்கள் பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்கவே ஒன்றிணைந்துள்ளார்கள். இது துரதிர்ஷ்ட வசமானது.
சந்தர்ப்பவாதமே இந்தக் கூட்டணிக்கு அடித்தளம். இந்தக் கூட்டணி முறையாக ஆட்சி அமைப்பார்களா என்ற சந்தேகம் இருக்கிறது. அப்படியே சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்தாலும், 6 மாதங்கள் முதல் 8 மாதங்கள் கூட நிலைக்காது. அரசியலும், கிரிக்கெட்டும் ஒன்று களத்தில் இரண்டிலும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் " என்று தெரிவித்திருந்தார். நிதின் கட்கரி தெரிவித்தது போலவே மகாராஷ்டிராவில் இன்று அடுத்தடுத்து திருப்பங்கள் நடந்துள்ளன