Published : 23 Nov 2019 02:33 PM
Last Updated : 23 Nov 2019 02:33 PM

நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவை வீழ்த்துவோம்: காங்கிரஸ் உறுதி

மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பதற்கு காங்கிரஸ் தாமதம் செய்ததை பாஜக பயன்படுத்திக் கொண்டதாக கூறுவது தவறானது, அப்படி ஏதும் நடைபெறவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கூறினார்.

மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து முடிந்த பின் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வதில், சிவசேனா, பாஜக இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் பாஜகவுடன் 35 ஆண்டுகள் தொடர்ந்த கூட்டணியை சிவசேனா முறித்தது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டன. இதற்காக குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கின. மூன்று கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைக்கவும், முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்தசூழலில் திடீர் திருப்பமாக பாஜக,தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைத்தன. முதல்வராக தேவேந்திர பட்னாவிஸும் 2-வது முறையாகவும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவி ஏற்றனர்.

ஆனால் இது அஜித் பவாரின் முடிவு, இதில் தேசியவாத காங்கிரஸூக்கு உடன்பாடில்லை என சரத் பவார் அறிவித்தார்.

இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் பிற்பகல் 12:30 மணியளவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூட்டாக பேட்டியளித்தனர். மகாராஷ்டிரா அரசியலில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் அப்போது அவர்கள் இருவரும் தங்கள் நிலைப்பாட்டை விளக்கினர்.

இதை்தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர்களான அகமது படேல், மல்லிகார்ஜுன கார்கே, சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் தனியாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர். அப்போது அகமது படேல் கூறியதாவது

‘‘மகாராஷ்டிர அரசியலில் இன்று கறுப்பு தினம். காலை முதல் நடந்து வரும் சம்பவங்கள் அருவருக்கத்தக்கவை. அனைத்தும் தவறாகவே நடந்துள்ளது. இது வெட்கக்கேடானது.

மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பதற்கு காங்கிரஸ் தாமதம் செய்ததை பாஜக பயன்படுத்திக் கொண்டதாக கூறுவது தவறானது. அப்படி ஏதும் நடைபெறவில்லை.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்றாக உள்ளோம். நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசை வீழ்த்துவோம்.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளனர். கட்சித் தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவர். மகாராஷ்டிராவை பாஜகவை அரசியல் ரீதியாகவும், சட்டப்பேரவையிலும், நீதிமன்றத்திலும் உரிய வகையில் சந்திப்போம்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x