

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இணைய வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அழைப்பு விடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் சிவசேனாவுக்கும், பாஜகவுக்கும் இடையே முதல்வர் பதவி தொடர்பாக ஏற்பட்ட மோதலால், கூட்டணி பிரிந்தது. இதனால், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமலும், ஆட்சி அமைக்க முடியாமலும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதையடுத்து, சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் இறங்கின. 3 கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உறுதியாகி இன்று ஆட்சி அமைப்பதாக இருந்தது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத நிலையில், என்சிபி கட்சி ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது.
முதல்வராக 2-வது முறையாக தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வராக என்சிபி தலைவர் அஜித் பவாரும் பதவியேற்றுக் கொண்டனர்.
இதுகுறித்து புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் தலைவரும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே இன்று பாட்னாவில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், " மகாராஷ்டிராவில் மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸுக்கு எனது வாழ்த்துகள். துணை முதல்வராக அஜித் பவார் பதவி ஏற்றுள்ளார். அவருக்குப் பக்கபலமாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இருக்க வேண்டும். ஆதரவு அளிக்க வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை சரத் பவார் தன்னுடைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேண்டும். அவ்வாறு சரத் பவார் என்டிஏ கூட்டணியில் சேர்ந்தால் அவருக்கு உரிய கவுரவம், அங்கீகாரம் கிடைக்கும். உரிய அமைச்சர் பதவிகளும் கிடைக்க வாய்ப்புண்டு" என்று ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.