

மத்தியப் பிரதேச மாநிலம், பிந்த் மாவட்டத்தில் ஒரே பெயர் கொண்ட இரு விவசாயிகளுக்கும் ஒரே வங்கிக் கணக்கை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(எஸ்பிஐ) வங்கி உருவாக்கிக் கொடுத்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
ஒரு விவசாயி தன் கணக்கில் பணம் டெபாசிட் செய்ய, அதே வங்கிக் கணக்கு வைத்திருக்கும் மற்றொரு விவசாயி யார் பணம் டெபாசிட் செய்தது எனத் தெரியாமல் பிரதமர் மோடிதான் டெபாசிட் செய்தார் என்று நினைத்து எடுத்து செலவு செய்ததாகத் தெரிவித்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது
பிந்த் மாவட்டம், ரூராய் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹக்கும் சிங். ருவானி கிராமத்தைச் சேர்ந்தவர் பெயரும் ஹக்கும் சிங். இருவரும் ஆலம்பூர் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் கணக்குத் தொடங்கினர்.
இருவரின் பெயரும் ஹக்கும் சிங் என்று ஒரே மாதிரியாக இருந்ததால், வங்கி ஊழியர்கள் தவறுதலாக இருவருக்கும் ஒரே வங்கிக் கணக்கு எண்ணை அளித்துவிட்டனர். ரூராய் கிராமத்தைச் சேர்ந்த ஹக்கும் சிங் கணக்கில் ஏராளமான பணம் டெபாசிட் செய்துள்ளார். ஆனால், ருவானி கிராமத்தைச் சேர்ந்த ஹக்கும் சிங் கணக்கில் பணம் இல்லாத போது திடீரென ஏராளமான பணம் டெபாசிட் செய்யப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் தன்னுடைய தேவைக்கு ஏற்றார்போல் செலவு செய்துள்ளார்.
கடந்த மாதம் 16-ம் தேதி ரூராய் கிராமத்தைச் சேர்ந்த ஹக்கும் சிங் தனது வங்கிக் கணக்கைப் பார்த்தபோது பணம் எடுக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. வங்கிக்குச் சென்று விசாரித்தபோதுதான் அனைத்து விவரங்களும் தெரியவந்தன.
இது குறித்து ஆலம்பூர் எஸ்பிஐ வங்கி மேலாளர் ராஜேஷ் சோன்கர் கூறுகையில் " ரூராய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியும், ருவானி கிராமத்தைச் சேர்ந்த விவசாயியும் ஹக்கும் சிங் என்று ஒரே பெயர் கொண்டவர்கள். இருவருக்கும் தவறுதலாக வங்கி ஊழியர்கள் ஒரே வங்கிக் கணக்கு எண்ணை அளித்துவிட்டார்கள். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ரூராய் கிராமத்தைச் சேர்ந்த ஹக்கும் சிங் தனது வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்துள்ளார். ஆனால், ருவானி கிராமத்தைச் சேர்ந்த ஹக்கும் சிங் ஏழ்மை நிலையில் இருப்பவர். வங்கிக் கணக்கில் அதிகமான பணம் இல்லாமல் வைத்திருப்பவர். ஆனால், அவர் கணக்கில் அடிக்கடி அதிகமான பணம் டெபாசிட் ஆனது தெரியவர, அதை எடுத்து தன்னுடைய விருப்பத்துக்கு அடிக்கடி செலவு செய்துள்ளார்.
கடந்த மாதம் 16-ம் தேதி மிகப்பெரிய அளவில் ரூராயைச் சேர்ந்த ஹக்கும் சிங் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டு இருந்தது. அதுகுறித்து வங்கியில் புகார் செய்யவே. எங்கு பணம் எடுக்கப்பட்டது, யார் எடுத்தது என்று ஆய்வு செய்தபோது, ருவானி கிராமத்தைச் சேர்ந்த ஹக்கும் சிங் என்பவருக்கும் அதே வங்கிக்கணக்கு இருப்பதைக் கண்டுபிடித்தோம். அதன்பின் தற்போது வேறு வங்கிக் கணக்கு வழங்கியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து ருவானி கிராமத்தைச் சேர்ந்த ஹக்கும் சிங்கிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறுகையில், " என்னுடைய வங்கிக் கணக்கில் யாரோ சிலர் அடிக்கடி பணம் டெபாசிட் செய்தனர். எனக்கென்ன தெரியும். பிரதமர் மோடிஜி தான் பணம் எனக்கு டெபாசிட் செய்கிறார் என்று நினைத்தேன். அதனால்தான் எடுத்து செலவு செய்தேன். என்னுடைய தவறு இதில் என்ன இருக்கிறது. வங்கியின் கவனக் குறைவுதான் காரணம்" எனத் தெரிவித்தார்.
பணத்தைப் பறிகொடுத்த ரூராய் கிராமத்தைச் சேர்ந்த ஹக்கும் சிங் கூறுகையில், " கடந்த 2016-ம் ஆண்டு வங்கிக் கணக்கை எஸ்பிஐ வங்கியில் தொடங்கினேன். சீரான இடைவெளியில் பணம் டெபாசிட் செய்து வந்தேன். நான் சமீபத்தில் ஒரு இடம் வாங்குவதற்காக என்னுடைய கணக்கில் அதிகமான பணம் டெபாசிட் செய்திருந்தேன். அப்போது, திடீரென என்னுடைய கணக்கில் இருந்து ரூ.89 ஆயிரம் எடுக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அதன்பின் வங்கிக்குச் சென்று புகார் அளித்துக் கண்டுபிடித்தேன். என்னுடைய பணத்தைத் திருப்பிக் கொடுங்கள் என்று பலமுறை வங்கிக்குச் சென்று முறையிட்டும் பதில் இல்லை" எனத் தெரிவித்தார்.
எஸ்பிஐ வங்கியின் செயலால் இரு விவசாயிகளும் சண்டையிட்டுக் கொண்டனர்.