

மகாராஷ்டிர மக்கள் தீர்ப்புக்கு துரோகம் செய்துள்ளனர், சட்டவிரோதமாக அமைந்துள்ள இந்த அரசு தானே கவிழ்ந்து விடும் என காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.
மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து முடிந்த பின் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வதில், சிவசேனா, பாஜக இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் பாஜகவுடன் 35 ஆண்டுகள் தொடர்ந்த கூட்டணியை சிவசேனா முறித்தது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டன. இதற்காக குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கின. மூன்று கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைக்கவும், முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்தசூழலில் திடீர் திருப்பமாக பாஜக,தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி் அமைத்தன. முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் 2-வது முறையாகவும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவி ஏற்றனர்.
ஆனால் இது அஜித் பவாரின் முடிவு, இதில் தேசியவாத காங்கிரஸூக்கு உடன்பாடில்லை என சரத் பவார் அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் பிற்பகல் 12:30 மணியளவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தங்கள் நிலைப்பாட்டை விளக்கவுள்ளனர்.
மகாராஷ்டிராவில் சட்டவிரோதமாக புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘மகாராஷ்டிர மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக துரோகம் செய்து விட்டனர். இதைத் தான் ஜனநாயகப் படுகொலை செய்வதற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் என்பார்கள். ஆட்சிக்காக கொள்கைகளை கைவிட்டு விட்டார்கள்.
ஊழல் நடந்துள்ளது. ’’ எனக் கூறியுள்ளார்.
மற்றொரு மூத்த தலைவர் அகமது படேல் கூறுகையில் ‘‘இது வெட்கக்கேடானது. சட்டவிரோதமாக இந்த அரசு அமைந்துள்ளது. இது தானாகவே கவிழந்து விடும்’’ எனக் கூறியுள்ளார்.
இதுபோலவே ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் மகாராஷ்டிராவில் ஜனநாயகப் படுகொலை நடந்துள்ளதாக சாடியுள்ளார்.